விஜய் நடித்திருக்கிற ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் மூன்று டிராகன்களைக் கொண்ட ஒரு மீம் டெம்ப்ளேட் எவர்கிரீன் டிரண்டாக அவ்வபோது வலம் வரும். ‘கோட்’ படத்தின் விசில் போடு பாடலின் ஸ்டில்ஸை பார்க்கும்போது அந்த மீம்தான் பலருக்கும் நினைவில் வந்திருக்கும். அப்படியான அசுர ஆற்றலுடன் மூன்று டிராகன்களான விஜய், பிரசாந்த், பிரபு தேவா ஆடுவார்கள். இன்றைய காலத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே எப்படியான போட்டி நிலவுகிறதோ அதே போலதான் 90களில் பிரசாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போட்டி நிலவியது.
`சாக்லெட் பாய்’ பிரசாந்த்
ஆம், பிரசாந்த் தன்னுடைய 17 வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். அப்போது இவரின் செல்லப் பெயரே `சாக்லெட் பாய்’தான். அதே சமயம் மற்றொரு பக்கம் விஜய்யும் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ என ரெமான்டிக் ஹீரோவாக ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமல்ல, இவர்கள் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பான போட்டியும் அப்போதெல்லாம் நிலவியது. இப்படியான பல காரணங்களாலேயே விஜய் மற்றும் பிரசாந்த் ரசிகர்களிடையே அப்போது போட்டி பயங்கரமாக இருந்தது.
எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் பிரசாந்த் அதில் அனாயசமாக அதில் தன்னை பொருத்திக் கொள்வார். கரியரை தொடங்கிய சமயத்திலேயே ஒரு வருடத்தில் ஆறு படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு! அவருடைய மேனரிசம்தான் அன்றைய நாளில் அவருக்கு தொடந்து ரொமான்டிக் படங்களை தேடிக் கொடுத்தது எனலாம்.
அதுமட்டுமல்ல, புதிய முயற்சிகளை எடுத்து ஒவ்வொரு படத்திற்கு தன்னை மெருகேற்றிக் கொண்டே இருப்பார். படத்திற்கு எந்தவொரு விஷயம் தேவையாக இருந்தாலும் அதை உடனடியாக பிரசாந்த் திறம்பட கற்றுவிடுவார். அப்படி பியானோ உட்பட பல விஷயங்களை கற்று வைத்திருக்கிறார். 1994-லிலேயே மணி ரத்னம் முக்கியமான இயக்குநராக வலம் வந்தார். ‘நாயகன்’, ‘தளபதி’ என இரண்டு பிரமாண்ட வெற்றிகளை அவர் அந்த சமயத்தில் கொடுத்திருந்தார். பிரசாந்துக்கு தனது கரியரை தொடங்கிய இரண்டு வருடங்களிலேயே மணி ரத்னம் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து காதல் படங்களில் நடித்தாலும் அதிலும் வெவ்வேறு பரிணாமங்களை காட்டவே பிரசாந்த் முயற்சி செய்தார். ‘ஜீன்ஸ்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ஜோடி’ போன்ற ஹிட் படங்களை அடுக்கி சாக்லேட் பாயாக அன்றைய கல்லூரி பெண்களின் க்ரஷ் லிஸ்டில் தவிர்க்க முடியாத நபராக இடத்தைப் இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
ஆனால், காலந்தோறும் டிரண்ட் விஷயங்களுக்கேற்ப மாறிவிட வேண்டுமென எண்ணிய பிரசாந்த் தமிழ் சினிமாவுக்கு பெரிதும் பரிச்சயமில்லாத ஒரு ஜானர் படத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். 2004 போன்ற காலக்கட்டங்களில் ஹாரர் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வளவாக வந்ததில்லை. ஆனால், 2004-லிலேயே ‘ஷாக்’ என்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படத்தில் நடித்தார். கடிவாளம் கட்டியது போல ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை பிரசாந்த் துளியும் விரும்பவில்லை. இந்த எண்ணமே வித்தியாசனமான கதைகளங்களுக்கான தேடலுக்கு பிரசாந்தை கொண்டுச் சென்றது. 2006-க்கு பிறகு சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்ட பிரசாந்த் 2011-ல் ரீ – என்ட்ரி கொடுத்தார். கலைஞரின் ‘பொன்னார் சங்கர்’ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்தார்.
இதன் பிறகு இவரின் தந்தை தியாகராஜன் நடித்திருந்த மலையூர் மம்பட்டியான் படத்தின் ரீமேக்கில் இவர் நடித்தார். இந்த படங்களும் எதிர்பார்த்ததைப் போல பெரிதாக வெற்றியை தேடி தரவில்லை. அதன் பிறகும் மீண்டும் ஒரு இடைவெளியை பிரசாந்த் எடுத்துக் கொண்டார். பிரசாந்த் நடிப்பில் , செல்வமணி இயக்கத்தில் ‘புலன் விசாரனை -2’ திரைப்படத்தின் ஷூட்டிங் 2008-ல் தொடங்கிவிட்டார்கள். ஆனால், சில காரணங்களால் அத்திரைப்படத்தின் ரிலீஸும் தாமதமாகி 2015-ல் வெளியானது. ‘பீல்டு அவுட், பீல்டு அவுட்’ என்ற கரகோஷங்கள் பிரசாந்தை சுற்றி அப்போது எழத் தொடங்கியது. அடுத்தடுத்து பாலிவுட்டில் ஶ்ரீராம் ராகவன் இயக்கிய இரண்டு படங்களை தமிழில் ரீமேக் செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக்கான ‘அந்தகன்’ திரைப்படம் இந்த வருடம் வெளியாகி பிரசாந்துக்கு மாஸ் கம்பேக்காக அமைந்தது.
இந்த நிலையில் விஜய்யுடன் அவர் நடித்திருக்கும் ‘கோட்’ திரைப்படம் ரிலீஸாகிறது. அதிரடியான கம்பேக்கை தொடர்ந்து பிரசாந்துக்கு மற்றுமொரு பெயர் சொல்லும் படைப்பாக ‘கோட்’ இருக்கும்! பிரஷாந்த் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது என்பதை கமெண்ட் செய்யுங்க மக்களே..!