மலையாள நடிகை ஒருவர், தனக்கு 18 வயதாக இருக்கும்போது தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக, மனம் உடைந்து பேசியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மலையாளத் திரையுலகில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் மலையாளத் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளது, பெரும் அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இதே போன்று எல்லாத் திரைத்துறையிலும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஆய்வுகளும், நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளைப் பொதுவெளியில் எடுத்துரைத்து, நீதிக்காகப் போராட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அவ்வகையில் பெண்கள் பலரும் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளைப் பொதுவெளியில் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
அவ்வகையில் 90-களின் காலத்தில் மலையாள நடிகையாக இருந்த ஒருவர், தனியார் ஊடகப் பேட்டி ஒன்றில் தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை, தனது 18 வயதில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியதாக வெளிப்படையாகப் பேசி குற்றம்சாட்டியிருக்கிறார். இது குறித்து பேசியிருக்கும் அந்த நடிகை, “எனக்கு 18 வயதிருக்கும். நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரி நாடகக் குழுவில் அவ்வப்போது நடித்துக் கொண்டிருந்தேன். நடிகை ரேவதியின் வீட்டுப் பக்கத்தில்தான் என் வீடு. அவரைப் பார்த்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்தது.
கல்லூரி நாடகக் குழுவின் மூலம் தமிழ் இயக்குநரின் படத்தில் நடிப்பதற்காக நேர்முகத் தேர்வில் பங்குகேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில் கலந்துகொண்டேன். அவர்களும் என்னைப் படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறினார்கள். ஆனால், அந்த இயக்குநரிடமும் ஏதோவொன்றுத் தவறாக இருப்பதாக என் மனதில் அசெளகரிய நிலை ஏற்பட்டது. இது குறித்து என் பெற்றோரிடம் கூறினேன். ஆனால், அந்த இயக்குநர் என்னை தனது மகள்போல நடத்தியதில் நாங்கள் ஏமாந்துவிட்டோம். ஒவ்வொரு முறையும் அவர் என்னை ‘மகள்’ என்றே அழைத்தார்.
ஆனால், படப்பிடிப்புக்குச் சென்றபோது அந்த இயக்குநர் வேண்டுமென்றே என்னிடம் கோபமாக நடந்து கொண்டார். பெண்கள் மீது அத்துமீறும் ஆண்கள் செய்யும் தந்திரமான உளவியல் தாக்குதல் அதுதான்.
அந்த 18 வயதில் அப்போது அது எனக்குப் புரியவில்லை. படப்பிடிப்பு நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சாப்பிடச் சொல்வது, நல்ல உணவுப் பொருள்களைத் தருவது என அந்த இயக்குநரும், அவரது மனைவியும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.
ஒருநாள் மனைவி இல்லாத நேரம் பார்த்து என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார் அந்த இயக்குநர். நானும் அது தெரியாமல் அவரது வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் யாருமில்லாத அந்த நேரத்தில் அந்த இயக்குநர் என்னருகில் நெருங்கி என் மீது பாலியல் ரீதியான தொடுதலைச் செய்தார். அன்று அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். இதுகுறித்து பெற்றோர், நண்பர்கள் என எவரிடமும் சொல்வதற்கு எனக்கு அச்சமாக இருந்தது. அந்த வயதில் அதை என்னால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. வேறு வழியின்றி படத்தில் நடிக்கவும், நடனப் பயிற்சி வகுப்புகளுக்கும் எப்போதுபோலச் சென்றேன். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக என் மனதைக் குழப்பமடையச் செய்து என்னை பாலியல் ரீதியாகக் கொடூரமாகத் துன்புறுத்தினார் அந்த இயக்குநர். கல்லூரி படிக்கும் 18 வயதில் மிகக் கொடுமையான வலிகளை நான் அனுபவித்தேன். என்னை தனது மகளாக நடத்தியபடியே இந்தக் கொடுமையை எனக்குச் செய்திருக்கிறார் அந்தத் தமிழ் இயக்குநர். அந்தப் பாதிப்பிலிருந்து நான் வெளியே வருவதற்கு பல ஆண்டுகளானது.
இன்று எந்தப் பெண்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அச்சமின்றி உங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை பொதுவெளியில் ஒவ்வொருப் பெண்களும் தைரியமாகச் சொல்ல வேண்டும், நீதி கிடைக்கும் வரை போராடவேண்டும்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார் அந்த மலையாள நடிகை.