தீவிரவாதத்தைக் கட்டுக்குள் வைக்கும் ஸ்பெஷல் SATS பிரிவில் அண்டர்கவர் அதிகாரியாக இருக்கிறார் காந்தி (விஜய்). மிஷன் ஒன்றின்போது தன் ஐந்து வயது மகன் ஜீவனை இழந்துவிட்டதாக நினைத்து காந்தி உடைந்துபோயிருக்க, பல வருடங்கள் கழித்து மீண்டும் ஜீவனை (இதுவும் விஜய்தான்) எதிர்பாராத இடம் ஒன்றில் சந்திக்கிறார். இப்படி இணையும் தளபதியும் இளைய தளபதியும் என்ன செய்தார்கள், இவற்றுக்கெல்லாம் பின்னணியிலிருந்த விஷயங்கள் என்னென்ன என்பதே ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஒன்லைன்.
ரொம்பவே பழக்கப்பட்ட கதைதான். அதில் டி-ஏஜிங், பெரிய நடிகர் பட்டாளம், ரீலுக்கு ஒரு ட்விஸ்ட், சர்ப்ரைஸ் கேமியோ, ஆங்காங்கே ட்ரேட்மார்க் VP விஷயங்கள் என ஒரு கமர்ஷியல் காக்டெய்லைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் வெங்கட் பிரபு. அதில் ஓரளவு கரையேறியும் இருக்கிறார், அவ்வப்போது சறுக்கியும் இருக்கிறார்.
இரு வேறு தோற்றங்களில் விஜய். இதற்கு முன்பே ‘பிகில்’ படத்தில் அப்பா, மகன் வேடத்தில் நடித்துவிட்டாலும் இது அவருக்கு வேறொரு களம். கலாட்டாவான SATS ஏஜென்ட் மற்றும் கணவர், உடைந்துபோன தந்தை, துள்ளல் மகன் என ஒரே படத்தில் பல்வேறு பரிமாணங்கள். இதில் காந்தி, நாம் ஏற்கெனவே பழக்கப்பட்ட விஜய்தான். ஆனால், மகன் ஜீவனாக எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் வைத்துக்கொள்ளாமல் இறங்கியடித்திருக்கிறார். உடல்மொழி, சின்ன சின்ன மேனரிசங்கள், நக்கல் என மொத்தமாக அந்தக் கதாபாத்திரத்தில் நாம் இதுவரை பார்க்காத விஜய்யை கண்முன் நிறுத்துகிறார். சில இடங்களில் அது ஓவர்டோஸ் ஆனாலும் படத்தைப் பெருமளவில் தாங்கிப்பிடித்திருப்பதும் அந்த விஜய்யின் நடிப்புதான். பல ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் விஜய் – சினேகாவின் கெமிஸ்ட்ரி க்யூட்.
நண்பர்கள் கூட்டத்தில் வலுவான பாத்திரத்தைச் சுமந்திருக்கும் பிரஷாந்த், சில காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். இவர்கள் அல்லாமல் ஜெயராம், பிரபுதேவா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். மற்றொரு நாயகியாக வரும் மீனாக்ஷி சௌத்ரிக்குப் பெரிய வேலையில்லை. இரண்டாம் பாதியின் பரபரப்பைத் தணிக்க யோகி பாபுவின் காமெடி ஒன்லைனர்கள் உதவுகின்றன. முக்கிய வில்லனாக மோகன், சுவாரஸ்யத் தேர்வு என்றாலும் போதிய மிரட்சியை ஏற்படுத்தவில்லை.
SATS குழுவின் மிஷனிலிருந்து தொடங்குகிறது படம். விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகிய நான்கு பேரின் நட்பு, வீட்டிற்கே தெரியாமல் அண்டர்கவர் ஏஜென்ட்களாக இருந்து மனைவிகளிடம் அவர்கள் படும் பாடு என ஆரம்பக் காட்சிகள் ‘நாஸ்டால்ஜியா விஜய் படமாக’ சுவாரஸ்யப்படுத்துகின்றன. SATS மிஷன்களும் அதிரடி ஆக்ஷனுக்கு நல்ல தீனி போடுகின்றன. ஆனால், அந்த மிஷன்களில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் போதிய தெளிவில்லை. ‘என்ன மேட்ச், என்ன டீமு’ன்னே தெரியாமல் நாமும் அவர்கள் செய்யும் சாகசங்களைக் கொஞ்சம் தொலைவிலிருந்தே வேடிக்கை பார்க்க வேண்டியதாக இருப்பது மைனஸ்.
பல நாடுகள் சுற்றும் கதையை அதற்கான அழகியலும், பிரமாண்டமும் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது சித்தார்த் நுனியின் கேமரா. பாடல்களில் ஏமாற்றமளித்தாலும் பின்னணி இசையில் அதை ஓரளவு ஈடுகட்டிவிடுகிறார் யுவன். படத்தின் தரத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியிருக்கிறது ராஜீவனின் கலை இயக்கம். முக்கிய காட்சிகளில் எடிட்டர் வெங்கட் ராஜனின் கட்ஸ் சிறப்பு. ஆனால், அவ்வப்போது திரைக்கதை தேங்கி நிற்கும் இடங்களில் இன்னும் ஸ்ட்ரிக்ட்டாக கத்திரியை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
பெரும் விமர்சனத்துக்குள்ளான இளைய விஜய்யின் டீ-ஏஜிங் காட்சிகள் படத்தில் சிறப்பாகவே வந்திருக்கின்றன. அப்படியான முயற்சியைச் சாத்தியப்படுத்திய VFX குழுவுக்குப் பாராட்டுகள். ஆனால், அதே நேர்த்தி விஜயகாந்த் கேமியோவிலும் பதின்பருவ விஜய் கதாபாத்திரத்திலும் கைகூடி வரவில்லை. சில க்ரீன் ஸ்க்ரீன், ப்ளூ மேட் காட்சிகளும் பிசிறு தட்டுகின்றன.
இரண்டாம் பாதி முழுவதும் ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மோதலும் துரத்தலும்தான். அதை இன்னும் கூடுதல் சுவாரஸ்யத்துடன் எழுதத் தவறியிருக்கிறது வெங்கட் பிரபு, எழிலரசு, குணசேகரன் கூட்டணி. நெருக்கமானவர்களைக் கடத்துவது, அதை வைத்து மிரட்டுவது என 80ஸ், 90ஸ் படங்கள் கணக்காக ஒரே மாதிரியாக நகர்கிறது திரைக்கதை. இன்னுமே 20 – 30 நிமிடங்களைச் செதுக்கியிருக்கலாமே VP?! இதனால் மொத்த இரண்டாம் பாதியும் அந்த 20 நிமிட கிளைமாக்ஸ் காட்சியை நம்பியே இருக்கிறது. அதிலும் திரைக்கதை ரீதியாகச் சுவாரஸ்யமாக எதுவுமில்லை என்றாலும் ‘சி.எஸ்.கே’ ரெஃபரென்ஸ், சர்ப்ரைஸ் கேமியோ, இரு விஜய் கதாபாத்திரங்களையும் பயன்படுத்திய விதம் என அவுட் ஆஃப் சிலபஸ் விஷயங்களை வைத்துத் தப்பித்துவிடுகிறார் வெங்கட் பிரபு. அதே சமயம், அடுத்த பாகத்துக்கான அந்த பில்ட்-அப் காட்சி வேண்டுமென்றே திணிக்கப்பட்ட உணர்வையே தருகிறது.
டைட்டிலுக்கு நியாயம் செய்யவில்லை என்றாலும் ஒரு சராசரி கமெர்ஷியல் படமாக ரசிகர்களை மகிழ்விக்கிறான் இந்த `கோட்’!