ஹைதராபாத்: ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தி, ஓய்வு பெற்ற மெட்ரோ ரயில்வே ஊழியர் ஒருவரிடம் ரூ.13.26 கோடி மோசடி செய்த கும்பலை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சமீபத்தில் ஒருவரிடம் ரூ.8.6 கோடி மோசடி செய்யப்பட்டதே, தனி நபர் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய மோசடியாக கருதப்பட்டது. ஆனால்,தற்போது ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஒரு முதியவரிடமிருந்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தி ஒரு கும்பல் ரூ.13.26 கோடி மோசடி செய்தது.
இந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வாட்ஸ் ஆப் மூலம் ஆன்லைன் ஸ்டாக் புரோக்கிங் அறிவுரைகளை கேட்டு வந்தார். இவரும் அடிக்கடி பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்தார்.
லிங்க் அனுப்பிய கும்பல்: இதனை கவனித்த மோசடி கும்பல், ஏஎஃப்எஸ்எல், அப் ஸ்டாக்ஸ், இண்டர்நேஷனல் புரேக்கர்ஸ் (ஐபி) போன்ற கம்பனி பெயர்களில் முதியோருக்கு லிங்க் அனுப்பி அவரை வாட்ஸ் ஆப் க்ரூப்பில் இணைத்தனர். இதில், முதியவருக்கு எவ்வித சந்தேகம் வராமல் பிரபல நிறுவனங்களின் பங்கு சந்தை நிலவரங்கள் குறித்து அடிக்கடி தெரியப்படுத்தினர். ஆனால், இவை போலி இணைய தளத்தின் லிங்க் என்பதை முதியவர் அறியவில்லை.
இந்நிலையில், அந்தந்த கம்பனிகளின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு, மோசடி பேர்வழிகள், முதியவரை தொடர்பு கொண்டனர். அந்த நிறுவனங்களில் முதியவரும் ஆர்வம் காட்டியதோடு, ரூ.13.26 கோடி வரை முதலீடும் செய்தார். ஆனால், சில நாட்களிலேயே அந்த மோசடி கும்பல் இவரை தொடர்பு கொள்ள வில்லை. இதனால், முதியவர் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார். இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோவில் கடந்த 2-ம் தேதி புகார் அளித்தார்.
கிரிப்டோ கரன்சி: அதன் பேரில், ஹைதராபாத் மெட்ரோவில் பணிபுரியும் ஹிமியாத் நகரை சேர்ந்த அதீர் பாஷா (25), அராபாத் காலித் முஹியுத்தீன் (25), சார்மினார் ஃபதே தர்வாஜாவை சேர்ந்த சையது காஜா ஹஷீமுத்தீன் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி தங்கள் கும்பலின் மூளையாக செயல்படுபவருக்கு அனுப்பி வைத்தனர். அவரை கைது செய்ய ஹைதராபாத் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.