இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 80 (2) (அ) பிரிவுக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநர், ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினர்கள், மத்திய வங்கியின் அனைத்து பிரதி ஆளுநர்கள் ஆகியோர் பாராளுமன்றத்தின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்றத்தினால் அல்லது அதன் ஏதாவது ஒரு குழுவினால் மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு தடவை வங்கியின் விவகாரங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சட்டத் தேவையை நிறைவேற்றும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
தற்பொழுது காணப்படும் நிலைமைக்கு ஒப்பீட்டளவில் இலங்கையின் பணவீக்கத்தை 5 வீதமாகக் குறைக்க முடிந்திருப்பதாகவும், கொள்கை வட்டி வீதம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நாணயமாற்று வீதத்தை வலுப்படுத்தி ரூபாவின் பெறுமதியை மேலும் உறுதிப்படச் செய்ய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நிதிக் கட்டமைப்பை ஸ்திரப்படுத்துவது தொடர்பான விடயங்களை மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாட்டில் வங்கி முறை வீழ்ச்சியடைவதை தடுக்க முடிந்தமை விசேட விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய மத்திய வங்கிச் சட்டம் மற்றும் வங்கி முறையை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டங்களும் உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வங்கி முறை, வங்கியல்லாத நிதி அமைப்பு, பங்குச் சந்தை மற்றும் காப்புறுதித் துறை உள்ளிட்ட முழு நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மைக்காக புதிய மத்திய வங்கி சட்டத்தின் மூலம் நிதிக் கட்டமைப்பு மேற்பார்வைக் குழுவை நியமித்தல் உள்ளிட்ட இலங்கையின் நிதி அமைப்பை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவற்றின் தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், தற்போதைய நிதி நிலைமை மற்றும் அதுதொடர்பான விடயங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் பதில் வழங்கினார்.
மத்திய வங்கியின் வகிபாகம் மற்றும் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தி இவ்வாறு கலந்துரையாடுவது மிகவும் முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
2024 Global Finance’s Central Banker அறிக்கையின் படி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.