கடன் நெருக்கடியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேலும் 51 பில்லியன் டாலர் நிதி- சீன அதிபர் அறிவிப்பு

சீன தலைநகர் பீஜிங்கில் சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. 50 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் சீனா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 51 பில்லியன் டாலர் நிதியுதவி, உள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு மற்றும் குறைந்தது 1 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ள மேம்பட்ட மற்றும் பசுமையான தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதை அடிப்படையாகக் கொண்ட சிறிய மற்றும் அழகான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளதாகவும், வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்கா முழுவதும் மூன்று மடங்கு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதாகவும் கூறி உள்ளார்.

தொழில்துறை, விவசாயம், உள்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா தயாராக உள்ளது என்றும் ஜி ஜின்பிங் கூறினார்.

புதிதாக 360 பில்லியன் யுவான் (50.70 பில்லியன் டாலர்) நிதி உதவி அளிப்பதாகவும், 210 பில்லியன் யுவான் கடனாகவும், குறைந்தபட்சம் 70 பில்லியன் புதிய முதலீடாக சீன நிறுவனங்களால் வழங்கப்படும் என்றும், ராணுவ உதவி மற்றும் பிற திட்டங்களின் மூலம் சிறிய தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்க கண்ட சுதந்திர வர்த்தக பகுதியின் மேம்பாட்டிற்கு உதவவும், ஆப்பிரிக்க பிராந்தியங்களுக்கு இடையேயான வளர்ச்சிக்கு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சீனா தயாராக உள்ளது என்று ஜி ஜின்பிங் கூறினார்.

ஆப்பிரிக்காவுடனான வர்த்தகத்தை சீனா பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் உள்கட்டமைப்புகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீனா மற்றும் ஒவ்வொரு ஆப்பிரிக்க மாநிலத்திற்குமான மூன்று ஆண்டு திட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு சீனாவிடம் கடன் பெற்ற பல ஆப்பிரிக்க அரசுகள் தங்கள் நாடுகளில் சீனாவால் கட்டமைக்கப்பட்ட உள்கட்டமைப்புக்கான கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பிரிவின் (SOAS) பேராசிரியர் ஸ்டீவ் சாங் கூறியிருக்கிறார்.

எனவே, சீனா கடன் மூலம் பொறி வைக்கும் ராஜதந்திரத்தை கையில் எடுத்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனா தனது “கடன் ராஜதந்திரத்தில்” மறைமுகமாக சில விஷயங்களை வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.