கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட மிலேனியம் விடுதிக் கட்டடத் தொகுதி அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட பிரிவுகள் உட்பட நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் பல மக்கள் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டன.
சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீப்பாலவின் தலைமையில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்று (05) இடம் பெற்றது.
சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவின் யோசனைக்கு இணங்க அரசாங்க வைத்தியசாலைகளின் பொறிமுறையை மேலும் பரவலாக்குதல் மற்றும் குறித்த வசதிகளை குறைபாடுகளின்றி சிகிச்சைக்காக வழங்கும் நோக்கத்துடன் வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து உடனடி தீர்வாக தரமான மற்றும் முறையான சுகாதார சேவையை மக்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சினால் இவ்விசேட வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரச் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால, சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயாகம் வைத்தியர் அசேல குணவர்தன உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கடந்த காலங்களில் வைத்தியசாலையில் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் சிகிச்சை செயற்பாடுகளை மேற்பார்வை செய்ததன் பிரதிபலனாக மேற்படி பிரிவுகள் விரைவாக நோயாளர்களுக்கான சிகிச்சை விரைவுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்வதற்கு இச்சந்தர்ப்பம் கிடைத்தது.
இதன் போது சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால உரையாற்றுகையில் கல்கிஸ்ஸை – தெஹிவளை மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பிரதான வைத்தியசாலையான களுபோவில கொழும்பு தெற்கு போதன வைத்தியசாலைக்கு சிகிச்சை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு தினமும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வருகை தருவதுடன், குறித்த அவசர விபத்து, சிகிச்சை மற்றும் இரசாயன ஆய்வுகூட பிரிவுகளி ன் சிகிச்சை சேவைகளை விஸ்தரித்து வைத்தியசாலை ஊடாக சிறந்த சுகாதார சேவை வழங்குவதன் மூலம் மேலும் பலப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் வைத்தியசாலையில் சிறிய புனர்நிர்மான செயற்பாடுகள் போன்ற வைத்தியசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியவசிய கொள்வனவுகளுக்காக சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலும் 500 நோயாளர்களுக்கான கட்டில்களை இந்த விடுதிக் கட்டடத் தொகுதிக்கு வழங்குவதாகவும் இதன்போது கருத்து தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சாலிந்த பண்டார, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (விநியோகம்) தினிப்ரிய ஹேரத் மற்றும் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலையின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.