வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், குடியாத்தம் பகுதியிலுள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார். இந்தக் கல்லூரியிலிருந்து அவ்வப்போது சில மாணவிகளை பயிற்சி பெறுவதற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவியும் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி மதியம் 1 மணியளவில், பயிற்சி வருகைக்கான கையெழுத்து பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவரான பாபு என்பவரை அணுகியுள்ளார் மாணவி. அப்போது, மாணவியின் இடது கையைப் பிடித்து இழுத்து, வக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறார் மருத்துவர் பாபு. பதறிப்போன மாணவி அலறி கூச்சல் போட்ட பிறகே, பிடியை விட்டிருக்கிறார்.
இதுகுறித்து, மாணவியின் தரப்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், மருத்துவர் பாபு மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உட்பட நான்குப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், மருத்துவர் பாபு கைது செய்யப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 4-ம் தேதி, `பாபு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி’ ஜனநாயக மாதர் சங்கத்தினர் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, 7 நாள்களுக்குப் பிறகு திருச்சி மேல கல்கண்டார்கோட்டை அருகே உறவினர் வீட்டில் பதுங்கிக்கொண்டிருந்த மருத்துவர் பாபுவை நேற்று நள்ளிரவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர். விசாரணைக்குப் பிறகு இன்று வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுகிறார் மருத்துவர் பாபு.