ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஒரு வரலாறு; அதனை மீண்டும் கொண்டுவர முடியாது என்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமித் ஷா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ஜம்மு நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்று அறிக்கையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “தேசிய மாநாட்டுக் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை வாசித்தேன். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப் பிரிவு 370 “வரலாறு” ஆகிவிட்டது. அது மீண்டும் வராது என்பதை ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சட்டப்பிரிவு 370 என்பது இனி அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை.
இந்தச் சட்டப்பிரிவு இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களையும் கற்களையும் மட்டுமே அளித்துள்ளது. அதோடு, பயங்கரவாதத்தின் பாதையில் செல்ல அவர்களுக்கு வழிவகுத்தது. கடந்த 10 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சி, நாட்டின் வரலாற்றிலும், ஜம்மு காஷ்மீரின் வரலாற்றிலும் பொன் எழுத்துகளால் எழுதப்படும். ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு எத்தகையதாக இருந்தாலும், குஜ்ஜார், பேக்கர்வால், பஹாடி சமூகங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டைத் தொட நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் உமர் அப்துல்லாவிடம் சொல்ல விரும்புகிறேன்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தோன்ற காரணமாக இருந்தவர்களை அதற்கு பொறுப்பேற்கச் செய்யும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை உறுதிப்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.