கர்நாடக மாநிலம் மாகடி ரோடு பகுதியில், பீக் ஹவரில் இரண்டு பெண்கள் ஒரே நேரத்தில் இரண்டு Ola ஆட்டோக்களை புக் செய்திருக்கின்றனர். அதில் எந்த ஆட்டோ முதலில் வருகிறதோ அதில் ஏறி செல்வதாக திட்டமிட்டிருக்கின்றனர். அதில் முதலில் வந்த ஆட்டோவில் இருவரும் ஏறியதும் அவர்கள் புக் செய்த மற்றொரு ஆட்டோவை கேன்சல் செய்திருக்கின்றனர். ஆனால் அந்த ஆட்டோ அவர்களுக்கு பின்னால் வந்திருக்கிறது. நடந்ததை யூகித்த ஆட்டோ ஓட்டுநர், அந்தப் பெண்கள் செல்லும் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று, கேன்சல் செய்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
வாக்குவாதம் அதிகமானதில் அந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. மேலும், “இவ்வளவு தூரம் வந்த எனக்கு செலவான அந்த எரிவாயுவை உன் அப்பா கொடுப்பாரா..” என தகாத வார்த்தைகளையும் பேசி, செல்போனை பறிக்க முயன்று, காவல் நிலையத்திற்குச் வருமாறும், அதற்காக தன் ஆட்டோவில் ஏறுமாறும் வற்புறுத்தியிருக்கிறார்.
நடந்தவைகளை வீடியோவாக பதிவு செய்த அந்தப் பெண், சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கூடுதல் தலைமை இயக்குனர் அலோக் குமார், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஒட்டுநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
அதன் அடிப்படையில், மாகடி ரோடு காவல்துறை ஆட்டோ ஓட்டுநரை கைது செய்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிவிற்கு பதிலளித்த ஓலா நிறுவனம்,“இந்த சம்பவம் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து உரியவிசாரணை நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.