Duleep Trophy Cricket News : துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. இப்போட்டியில் 19 வயதான முஷீர் கான் சிறப்பாக ஆடி சதமடித்தார். அப்போது கேலரியில் அமர்ந்திருந்த சக வீரரும், அண்ணனுமான சர்பிராஸ் கான், ஆனந்த கண்ணீரோடு குதித்து கொண்டாடி தம்பியை உற்சாகப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட்போட்டியான துலீப் டிராபி செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கியது. இந்தியா ஏ அணிக்கு சுப்மன் கில், இந்தியா பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், இந்தியா சி அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், இந்தியா டி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஏ அணியும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா பி அணி பேட்டிங் இறங்கியது. ஒப்பனிங் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஷ்வால் மட்டும் 30 ரன்கள் எடுக்க மற்ற எல்லா பிளேயர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். ரிஷப் பந்த் 7 ரன்களுக்கும், சர்பிராஸ் கான் 9 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்தியா பி அணி பெரும் சிக்கலில் இருந்தது. ஒரு கட்டத்தில் 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.
அப்போது, தனி ஒரு பிளேயராக களத்தில் நிலைத்து நின்ற முஷீர்கான் அற்புதமாக விளையாடி சமடித்தார். 227 பந்துகளை ஆடிய அவர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதில் 2 சிக்சர்களும் 10 பவுண்டரிகளும் அடித்தார். முஷீர்கானின் அற்புதமான பேட்டிங்கால் இந்தியா பி அணி இப்போது ஓரளவுக்கு கவுரமான நிலையில் இருக்கிறது. முஷீர் கான் சதமடித்தபோது கேலரியில் அமர்ந்திருந்த சர்பிராஸ் கான் துள்ளிக்குதித்து தம்பியை உற்சாகப்படுத்தியது காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சர்பிராஸ் கான் நீண்ட நாட்களாக இந்திய அணிக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்க, அதனை சரியாகவும் பயன்படுத்திக் கொண்டார். அடுத்ததாக வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்நோக்கியிருக்கிறார்.