ஹைதராபாத்: தெலங்கானாவில் மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் நடந்த மோதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலங்கானாவில், குறிப்பாக சத்தீஸ்கர் மாநில எல்லை பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் சற்று அதிகமாக உள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் மாவோயிஸ்ட்களில் பலர் ஏற்கெனவே அரசிடம்சரணடைந்து மறுவாழ்வு பெற்றுள்ளனர். அதில் சிலர் அமைச்சர்களாகக்கூட உள்ளனர். ஆனால், இன்னமும் சிலர் வனப்பகுதிகளில் மறைந்திருந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள ரகுநாத பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆயுதப்படை போலீஸார் அந்த வனப்பகுதியில் கடந்தசில நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வனப்பகுதியில்மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள்,நேற்று அதிகாலை போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதையடுத்து, மாவோயிஸ்ட்களை நோக்கி போலீஸார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் மாவோயிஸ்ட் லச்சண்ணா மற்றும் அவரது ஆதரவாளர்களான துளசி, சுக்ரம், ராமு, துர்கேஷ், கோபி ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். அவர்களது சடலங்களை கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக ஹைதராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சத்தீஸ்கரில் இருந்து வந்த 5 மாவோயிஸ்ட்களுக்கு லச்சண்ணா தலைமை வகித்து பயிற்சி அளித்துவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.