லக்னோ: நாட்டின் அமைதியை பாதுகாக்க முப்படைகளும் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நேற்று (செப். 5) நடைபெற்ற கூட்டு தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ஆயுதப் படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், “இந்தியாவின் அமைதி எந்தச் சூழ்நிலையிலும் சீர்குலைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே, ஆயுதப் படைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அமைதியை பேணுவது மிகவும் முக்கியமானது. அமைதியை பாதுகாக்க ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
‘உலகம் ஒரே குடும்பம்’ என்பது இந்தியாவின் நீண்டகால தத்துவம். இந்தியா அமைதிக்காக வாதிடும் அதே வேளையில், உள்நாட்டிலும் உலக அளவிலும் அமைதியை நிலைநாட்ட மோதலுக்கு தயாராக இருக்க வேண்டும். சர்வதேச விவகாரங்களை கருத்தில் கொண்டே, ராணுவத்தின் தயார்நிலை குறித்து வலியுறுத்தப்பட்டது” என தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று (செப். 5) லக்னோவில் நடந்த கூட்டுத் தளபதிகள் மாநாட்டின் தொடக்க அமர்வுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். அப்போது மூத்த ராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர், “எதிர்கால சவால்களைச் சமாளிக்க முப்படைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம். தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும், ‘தற்சார்பு இந்தியா’ பார்வைக்கு பங்களிப்பதிலும் ஆயுதப் படைகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றன.
அமைதியை விரும்பும் தேசமாக இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் அந்த அமைதியைப் பாதுகாக்க ராணுவத்தின் தயார் நிலை மிகவும் முக்கியம். முப்படைகளின் இணைந்த செயல்பாடு குறித்த பார்வையை ராணுவத் தளபதிகள் கொண்டிருக்க வேண்டும். எதிர்கால ஆத்திரமூட்டல்களுக்கு விரைவாகவும் தீர்க்கமாகவும் பதிலளிப்பதற்கான உத்திகளை உருவாக்க வேண்டும்.
ரஷ்யா-உக்ரைன் மோதல்கள், இஸ்ரேல்-ஹமாஸ் பதட்டங்கள், வங்கதேசத்தின் நிலை ஆகியவற்றிலிருந்து நாம் படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய மோதல்களை மதிப்பிடவும், இந்தியாவுக்கு சாத்தியமான சவால்களை எதிர்பார்க்கவும், எதிர்பாராதவற்றைச் சமாளிக்க தயாராக இருக்கவுமான பொறுப்பு தளபதிகளுக்கு இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.