சென்னை: விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் மாணிக்கம் தாகூர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4 ஆயிரத்து 379 வாக்குகள் அதிகம் பெற்று மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி விஜயபிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் மாணிக்கம் தாகூர் தனது வேட்புமனுவில் உண்மை தகவல்களை மறைத்துள்ளதாகவும், தேர்தல் முறைகேடுகளில் அவர் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்.14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.