Anbil Mahesh: “உன்னை சும்மா விடமாட்டேன்” – அன்பில் மகேஸ் எச்சரிக்கை!

சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் பேசிய மகா விஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையானப் பேச்சுக்களை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பேசுவதற்கு அழைக்கப்பட்ட மகா விஷ்ணு என்பவர் பாவ புண்ணியம், முன் ஜென்மம், குருகுல கல்வி, மறுபிறவி, கடவுள் மனிதர்களை மேல் -கீழ் எனப் படைப்பதற்குக் காரணமிருக்கிறது. போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதைப் பொறுத்தே உங்களுக்கு இந்தப் பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அறிவியலுக்குப் புறம்பாகவும் பேசியிருக்கிறார்.

இப்படி பல மூடநம்பிக்கைகள் சார்ந்த விஷயங்களை அரசுப் பள்ளி மாணவர் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது, அப்பள்ளியிலிருந்த விழிச் சாவல் கொண்ட ஆசிரியர் சங்கர், மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சில் மூட நம்பிக்கைகள் இருப்பதாகவும், அனைவரும் சமம் என்ற கருத்திற்கு எதிராக இருப்பதாகவும், மாணவர்கள் மனதில் தவறாகக் கருத்தை விதைப்பதாகவும் மகா விஷ்ணுவிடம் தைரியமாகக் கேள்வி எழுப்பினார்.

ஆசிரியர் சங்கர், சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணு

ஆனால் மகா விஷ்ணு, கேள்வி கேட்ட ஆசிரியருக்கு உரிய பதிலளிக்காமல், ‘நான் அப்படித்தான் பேசுவேன். என்னை ஏன் இங்கு அழைத்தீர்கள்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடாவடியாகப் பேசினார். இது தொடர்பானக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பப் பலரும் மகா விஷ்ணுவின் அடாவடித்தனத்தையும், பிரிவினையை விதைக்கும் பேச்சையும் கண்டித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகா விஷ்ணுவின் தவறானப் பிரிவினையைத் தூண்டும் பேச்சைக் காதாலேயேக் கேட்டுக் கண்டித்த விழிச் சாவல் கொண்ட ஆசிரியர் சங்கரை நேரில் சந்தித்துப் பாராட்டியிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். மேலும், ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன் என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ், “ஆசியர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு சங்கர் சார் ஓர் நல்ல உதாரணம். விழிச் சவால் கொண்ட அவர், தன் கேள்வி அறிவால் தவறைத் தட்டிக் கேட்டிருக்கிறார் என்பதை நினைக்கையில் வியப்பாக, பெருமையாகயிருக்கிறது. சங்கர் சார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீது புகாரளிக்கவில்லை என்றாலும், கணொலியின் அடிப்படையில், அதுவும் எங்கள் அரசுப் பள்ளியில் வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டு என்னோடு ஆசிரியரை அவமானப்படுத்திய அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை நாங்கள் உறுதியாகச் செய்வோம்.

அன்பில் மகேஸ்

இது நான் பொறுப்பிலிருக்கும் துறை. என்னோடு ஏரியாவுக்கு வந்து என்னோடு ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று காட்டமாகப் பேசி எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.