Doctor Vikatan: வாரத்தில் 2 நாள் காய்ச்சல், மாறிக் கொண்டே இருக்கும் டெம்ப்ரேச்சர், என்ன பிரச்னை?

Doctor Vikatan: எனக்கு  வாரத்தில் இரண்டு நாள்கள் காய்ச்சல் வருகிறது.  கடந்த 3 வாரங்களாக இது தொடர்கிறது. வீட்டிலேயே தெர்மாமீட்டர் வைத்துப் பரிசோதிக்கும்போது, 97,99, 100 என டெம்ப்ரேச்சர் மாறி மாறிக் காட்டுகிறது. இது காய்ச்சல்தானா என்றும் குழப்பமாக இருக்கிறது. இதற்கு ரத்தப் பரிசோதனை போன்ற வேறு ஏதேனும் தேவையா?

-Rishya, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார்.

வீட்டிலேயே டெம்ப்ரேச்சர் செக் பண்ணிப் பார்க்க நினைத்தால் மெர்க்குரி தெர்மாமீட்டர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அதில் என்ன டெம்ப்ரேச்சர் காட்டுகிறது என்று பார்க்கலாம்.

காலையில் பார்ப்பதற்கும் மாலையில் பார்ப்பதற்கும் டெம்ப்ரேச்சரில் வேறுபாடுகள் காட்டலாம். அது சாதாரணமானதுதான் என்பதால் அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், மெர்க்குரி தெர்மாமீட்டரில்  2 நிமிடங்களுக்கு முன்னதாக அதை வெளியே எடுக்கக்கூடாது. அதுவே டிஜிட்டல் தெர்மாமீட்டர் உபயோகிக்கிறீர்கள் என்றால், அதில் ரீடிங் முழுமையாகக் காட்டும்வரை வைத்திருக்க வேண்டும்.

டிஜிட்டல் தெர்மாமீட்டரை பயன்படுத்தும்போது அது காட்டும் டெம்ப்ரேச்சரில் வேறுபாடுகள் வந்தால், தெர்மாமீட்டரை மாற்ற வேண்டும். அக்குள் பகுதியின் அடியில் தெர்மாமீட்டரை வைத்தும் டெம்ப்ரேச்சரை பதிவு செய்யலாம். அக்குளுக்கு அடியில் தெர்மாமீட்டரை வைத்துப் பார்ப்பதானால், 99 டிகிரி காட்டுகிறது என வைத்துக்கொள்வோம்… அத்துடன் ஒன்று சேர்த்து உங்கள் உடல் வெப்பநிலை 100 டிகிரி என்றுதான் கணக்கிட வேண்டும்.

fever (Representational image)

சராசரி உடல்வெப்பநிலையானது சிலருக்கு 99 டிகிரியாக இருக்கலாம். உடலில் வெப்பநிலை அதிகரிப்பதாக உணர்ந்தால், அத்துடன் வேறு அறிகுறிகள் ஏதேனும் தென்படுகின்றனவா என்றும் பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் காய்ச்சல் அடிக்கிறதா, கூடவே குளிரும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த அறிகுறிகள் யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீர்த் தொற்று காரணமாக ஏற்படலாம். நம்மூரில் டிபி எனப்படும் காசநோயும் பரவலாகக் காணப்படுவதால் அதன் அறிகுறிகளா என்றும் பார்க்க வேண்டும்.

உடல் டெம்ப்ரேச்சர் என்பது ஒவ்வொரு வகை காய்ச்சலுக்கு ஒவ்வொரு மாதிரி வேறுபடலாம். உங்கள் உடல் வெப்பநிலையின் தன்மையை வைத்தே மருத்துவர், அது மலேரியாவா, டைபாய்டா, வேறு காய்ச்சலா என கண்டுபிடிப்பார். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கொரு முறையும் டெம்ப்ரேச்சரை பதிவு செய்யலாம். அதில் பார்க்கிற வேறுபாடுகளைக் குறித்துவைத்துக் கொண்டால், மருத்துவரைச் சந்திக்கும்போது அவரிடம் சொல்லித் தெளிவு பெற வசதியாக இருக்கும். அதை வைத்து, உங்களைப் பரிசோதித்துவிட்டு மேற்கொண்டு தேவைப்படுகிற டெஸ்ட்டுகளை மருத்துவர் பரிந்துரைப்பார். நீங்களாக ரத்தப் பரிசோதனை போன்ற எதையும் செய்து பார்க்கத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.