மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான லிஜோமோல் ஜோஸ், தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்தான். அதிலும் ‘ஜெய் பீம்’ செங்கேணியை எப்போதும் மறக்க முடியாது.
எதார்த்தமான கதாபாத்திரங்களின் வழியே நம் மனதைக் கவர்ந்த லிஜோமோல் ஜோஸ், நிஜத்திலும் அப்படித்தான். முக்கியமாக தமிழ் நன்றாகவே பேசுகிறார்.
‘‘மேக்கப்புக்காக அதிகம் செலவு செய்வது, வழக்கமான சருமப் பராமரிப்புக்காக இதெல்லாம் செய்கிறேன் என்று சொல்கிற அளவு என்னுடைய தினசரியில் ஒன்றும் இல்லை. சிலர் வீட்டிலிருக்கும் பாலாடை, மஞ்சள் போன்ற பொருள்களை வைத்தே அழகு பராமரிப்பில் ஈடுபடுவார்கள். அதுபோலவும் எந்த மெனக்கெடலும் இல்லை.
வீட்டிலேயே சருமப் பராமரிப்பு செய்வதாக இருந்தாலும் அதைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். என்னால் அது முடியாது. காரணம், நான் கொஞ்சம் சோம்பேறி‘‘ என்று சிரிக்கிறார்.
நெயில் பாலிஷ் போடுகிற பழக்கமும் ரொம்ப வருடங்களாகவே இல்லையாம். கர்லி ஹேர் எப்படி மெயின்டெயின் செய்கிறீர்கள் என்றால், ‘அது மட்டும் கொஞ்சம் கஷ்டம்‘ என்கிறார்.
‘‘சமீப காலமாகத்தான் அதற்கான வேலையையே ஆரம்பித்திருக்கிறேன். கர்லி ஹேருக்கு ஸ்பெஷலாக ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் கேர் ஜெல் எல்லாம் இருக்கின்றன. வீட்டில் இருக்கிற நேரத்தில் இந்த விஷயங்களைச் செய்துகொள்வேன். அதையும் தொடர்ச்சியாகச் செய்வதில்லை. ஷூட்டிங் நேரத்தில் அந்தக் கதாபாத்திரத்துக்காக மேக்கப் போட வேண்டும் என்பதால் வேறு எதையும் செய்வதில்லை.
பியூட்டி பார்லர் போகிற பழக்கம் இல்லை. ஹேர் கட்டுக்காக எப்போதாவது போவேன். ஃபேஷியல் பண்ண மாட்டேன். அதிகபட்சமாக காஜல், லிப்ஸ்டிக், சன் ஸ்க்ரீன் மட்டும்தான் என்னுடைய மேக்கப். அதுவும் டிராவல் டைம் என்றால் காஜல் கூட போட மாட்டேன்.‘‘ என்கிறார்.
”எனக்கு சீக்கிரம் தூங்குகிற பழக்கமும் இல்லை. நான் கொஞ்சம் லேட்டாக தூங்குகிற பெண். அதனால் கருவளையம் வந்துவிட்டது என்று கவலைப்படுவதும் இல்லை. ஷூட்டிங்கில் மேக்கப் போடுகிறபோது அவர்கள் அதற்கேற்றாற்போல் மேக்கப் போட்டுவிடுவார்கள்.” என்கிறவருக்கு ஜிம்முக்கு போகிற பழக்கம் இல்லையாம்.
ஜிம்முக்குப் போகாமல் ‘செங்கேணி‘ கதாபாத்திரத்துக்கு எப்படி உடல் எடையைக் குறைத்தீர்கள் என்றால், ‘‘எப்போதும் போல் எல்லா உணவுகளையும் சாப்பிட்டேன். ஆனால், அளவைக் குறைத்து விட்டேன். வொர்க் அவுட் கூட யூடியூப் பார்த்து வீட்டிலேயே செய்துகொண்டேன்.‘‘ என்று மீண்டும் சிரிக்கிறார்.
எல்லாவற்றையும் எளிதாகக் கையாளும் இவருக்கு வாழ்க்கையைக் கையாள்வதிலும் அதே சிம்பிள் அணுகுமுறைதான்.
‘‘எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்வதில்லை. வாழ்க்கை போகிற போக்கில் முடிவெடுப்பதுதான். சினிமாவில் சக நடிகர், நடிகைகளைப் பார்த்து நாமும் நம் அழகுக்காக இதெல்லாம் செய்ய வேண்டும் என்று எதையும் கற்றுக் கொள்ளவில்லை.
சினிமாவில் ‘நோ‘ சொல்வது எப்படி என்பது பற்றி மட்டும் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன், பொதுவாக ‘நோ’ சொன்னால் ஒருவரது மனம் கஷ்டப்படுமே என்று நினைக்கிற சுபாவம் எனக்கு. ஆனால், அதையும் மீறி இப்போது ‘நோ’ சொல்லக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதுவும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.’’ என்று சிரிக்கிறார்.
இயல்பாக இருப்பதே அழகு… இயற்கையாக இருப்பதே போதும் என்று நினைக்கிறாரோ என்னவோ…