Nagma : "கல்யாணம், குழந்தைன்னு வாழ எனக்கும் ஆசைதான்; ஆனா…" – நடிகை நக்மாவின் பர்சனல்

தமிழ் சினிமாவை ஆண்ட நாயகிகள் பலர். குறிப்பா, 90-கள்ல சிறகில்லாத தேவைதைகளா கோலோச்சிய நாயகிகள் பலருக்கும் இன்றளவும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்காங்க. அவங்களைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களைத் தெரியப்படுத்துறதுதான் இந்த ‘எவர்கிரீன் நாயகிகள்’ சீரிஸ். முதல் வாரம், நடிகை நக்மா.

‘காதலன்’  நக்மா…

“இந்திரையோ இவள் சுந்தரியோ… தெய்வ ரம்பையோ மோகினியோ”னு ஒலிக்கிற பாடலோட பின்னணியில், கால்ல கொலுசும் காதோரம் ஜிமிக்கியுமா தேவதைபோல ‘காதலன்’ படத்துல தோன்றிய நடிகை நக்மாவை ரசிக்காத 90-களின் சினிமா ரசிகர்கள் யாராவது இருக்காங்களா என்ன?

ஈர்ப்பான கண்கள், குண்டுமல்லி நிறம், வாட்டசாட்டமான உயரம், வசீகர சிரிப்பு, க்யூட் அண்டு செம ஸ்டைலான எக்ஸ்ப்ரெஷன்ஸூடன், ‘காதலன்’ படத்துல நக்மாவின் நடிப்பைப் பார்த்த ரசிகர்கள், ‘வாவ்’னு சொக்கிப் போனங்கன்னுதான் சொல்லணும். அதிலும், சுத்தமா தமிழே தெரியாம பீல்டுக்குள்ள வந்து, கிட்டத்தட்ட பத்து வருஷம் இவங்க தமிழ்த் திரையுலகத்துல கனவுக்கன்னியா ஆதிக்கம் செலுத்தினதெல்லாம் நிஜமாவே ஆச்சரியமான வரலாறுதான்.

90-களில் முன்னணி நடிகை, நடிகை ஜோதிகாவின் அக்கா, அரசியல்வாதிங்கிற அடையாளங்களைத் தாண்டி, நக்மாவைப் பத்தி நாம தெரிஞ்சுக்க என்ன இருக்குனு நினைக்கிறீங்களா? நிறைய சுவாரஸ்யங்களும் ஆச்சர்யங்களும் கொட்டிக்கிடக்கு. அதையெல்லாம்தான், இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.

நக்மாவோட சொந்த ஊர் மும்பை. அவங்க அப்பா அரவிந்த் மொரார்ஜி, அந்த ஊர்ல பெரிய பிசினஸ்மேன். அம்மா சீமா, சுதந்திரப் போராட்டத்துல தீவிரமா ஈடுபட்ட ‘காஸி’னு சொல்லப்படுற தேசப்பற்றுமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஒரு கட்டத்துல நக்மாவின் பெற்றோர் பரஸ்பரமா விவாகரத்து வாங்கிக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு, நக்மாவோட அம்மா சீமா, மறுமணம் பண்ணிக்கிட்டாங்க. அந்த மறுமணத்துல பிறந்த குழந்தைங்கதான் நடிகைகள் ஜோதிகாவும் ரோஷிணியும். தந்தை வேறுபட்டாலும், இந்த மூணு சிஸ்டர்ஸூக்குள்ளயும் இன்றளவும் பாசமும் அன்பும் துளிகூட மாறுபடவேயில்லை. அதனால, ஜோதிகாகூடவும் ரோஷிணிகூடவும் நக்மா எப்பவுமே ரொம்ப அட்டாச்மென்ட்டா இருப்பாங்க.

பெற்றோர் விவாகரத்து வாங்கிப் பிரிஞ்சிட்டாலும்கூட, தன் அப்பா இறக்கும் வரைக்குமே, அவர்கூட நக்மா ரொம்பவே சிநேகத்துடன் இருந்தாங்க. அதேபோல, அம்மாமேலயும் நக்மாவுக்கு எப்பவுமே அன்லிமிட்டட் லவ்தான். ஷூட்டிங் உட்பட நக்மா எங்க போனாலும், அவங்க அம்மாவும் நக்மாவுக்கு நிழலாவும் அரணாவும் உடனிருப்பாங்க. “சினிமா கரியர்ல நான் உச்சம் தொட்டத்துக்கு, எங்கம்மாதான் காரணம்”னு பல இன்டர்வியூஸ்ல நக்மா சொல்லிருக்காங்க. சரி, அவங்க சினிமால அறிமுகமான கதைக்குள்ளாற போகலாம்.

நக்மா, முதல்முதல்ல அறிமுகம் ஆனது பாலிவுட்லதான். 1990-ல் சல்மான்கானுக்கு ஜோடியா இவங்க நடிச்சு வெளிவந்த ‘Baaghi – The Rebel for Love’ அப்படிங்கற படம்தான் நக்மாவோட  திரை வாழ்க்கையின் விசிடிங் கார்டு. நக்மா நடிச்ச அந்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். 1990-ம் வருஷம் அதிக வசூலைக் குவிச்ச இந்திப் படங்களோட  பட்டியல்ல இந்தப் படமும் ஒண்ணு. இதுல ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, முதல் படத்துல நடிச்சப்போ நக்மாவுக்கு 15 வயசுதான். அத்தனை சின்ன வயசுலயும் அந்தப் படத்தை ரொம்ப மெச்சூர்டா ஹேண்டில் பண்ணிருப்பாங்க.

மறைந்த  பாலிவுட் நடிகை திவ்யபாரதியும் நடிகை நக்மாவும் நல்ல ஃபிரெண்ட்ஸ். “நீ ஏன் தமிழ், தெலுங்குப் படங்கள்ல நடிக்கக் கூடாது?” அப்படின்னு அவங்க நக்மாவைப் பார்த்துக் கேட்க, அதன்பிறகே அவங்க கவனம் தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பிருக்கு.

“எனக்குப் பயணம் செய்றதுன்னா ரொம்ப பிடிக்கும். குறிப்பா, இந்தியா முழுக்க இருக்கிற மக்களோட கலாசாரம், பழக்க வழக்கங்களை நேர்ல பார்த்துத் தெரிஞ்சுக்கணும்னு ஆசை. நான் தென்னிந்திய மொழிப் படங்கள்ல நடிக்க இதுவும் ஒரு காரணம்” அப்படின்னு இன்டர்வியூ ஒண்ணுல சொல்லியிருக்காங்க நக்மா.

1991-ம் வருஷம், தெலுங்கு படம் ஒண்ணுல அறிமுகமான நக்மா, ஹிந்தி, தெலுங்குன்னு மாறி மாறி பிஸியா நடிக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பிறகுதான் 1994-ம் வருஷம் ‘காதலன்’ திரைப்படம் மூலமா தமிழுக்கு வந்தாங்க. ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவான்னு ஜாம்பவான்கள் பலர் இணைஞ்சிருந்த அந்தப் படத்துல, நக்மாவால வெறும் கிளாமர் டாலா மட்டும்தான் வந்துபோக முடியும்னு எல்லோரும் சொல்ல, அந்த எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி, டான்ஸ், காதல், நடிப்புன்னு ஆல் ஏரியாவுலயும் பட்டையைக் கிளப்பினாங்க நக்மா.

இவங்களோட அசத்தல் பெர்ஃபார்மென்ஸை பாத்து ‘என்னவளே அடி என்னவளே…’ – அப்படின்னு ரசிகர்கள் இவரைப் பாத்து உருக ஆரம்பிச்சாங்க. இந்தப் படத்துல நடிகை நக்மாவுக்காக நடிகை சரிதா டப்பிங் பேசினாங்க. அவங்களோட குரல், நக்மா பண்ணியிருந்த ‘ஸ்ருதி’ங்கற கேரக்டருக்கு அவ்வளவு பாந்தமா பொருந்தியிருக்கும். நக்மாவின் கேரக்டரையே வேற லெவல்ல தூக்கி நிறுத்துனதுக்கு, சரிதாவின் குரலும் முக்கியமான காரணமா இருந்துச்சுன்னு சொல்லலாம். அதனாலதான், ‘பாட்ஷா’ படத்துலயும் நக்மாவுக்கு நடிகை சரிதாவே டப்பிங் பேசினாங்க.

‘காதலன்’ படத்துல, பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து இவர் ஆடின ‘முக்காபுலா முக்காபுல்லா’ பாட்டு, பட்டிதொட்டியெல்லாம் பாப்புலராச்சு. நக்மா குறித்த பேச்சும் இண்டஸ்ட்ரியில மின்னல் வேகத்துல பரவுச்சு. ‘காதலன்’ படத்துக்கு கிடைச்ச பிளாக்பஸ்டர் வெற்றியால, தன் ரெண்டாவது தமிழ்ப் படத்துலயே நக்மா ஸ்ட்ரெயிட்டா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியானாங்க. ‘பாட்ஷா’ படத்தோட வெற்றியைப் பத்தி சொல்லணுமா என்ன? இமாலாய வெற்றியால தமிழ் சினிமாவையே ஓர் உலுக்கு உலுக்கின இந்தப் படத்துல தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ரொம்ப கச்சிதமா செஞ்சாங்க நக்மா. இந்தப் படத்துல வர்ற ஸ்டைலு ஸ்டைலுதான் , ‘நீ நடந்தால் நடையழகு’ பாடல்கள்ல நக்மாவின் டான்ஸும் எக்ஸ்பிரஷன்ஸும் ‘அடிதூள்’ ரகத்துல இருக்கும்.

‘பாட்ஷா’ படத்துக்குப் பிறகு நக்மாவின் கரியர் கிராஃப், டாப் கியர்ல வேகமெடுத்துச்சு. சரத்குமாருடன் ‘ரகசிய போலீஸ்’, சத்யராஜுடன் ‘வில்லாதி வில்லன்’, பிரபுதேவாவோட ‘லவ் பேர்ட்ஸ்’னு டாப் ஹிட்ஸூடன் நிக்க நேரமில்லாம பரபரன்னு நடிக்க ஆரம்பிச்சாங்க. குறிப்பா, நடிகர் கார்த்திக்கோட இவர் சேர்ந்து நடிச்ச ‘மேட்டுக்குடி’ படம் இவருக்கு ரொம்ப நல்ல பேரை வாங்கிக் கொடுத்துச்சு.

‘இந்து’ அப்படிங்கற கதாபாத்திரத்துல, கார்த்திக்கை உருகி உருகிக் காதலிக்கும் பெண்ணா நக்மா இதுல க்யூட்டா நடிச்சு, பட்டையைக் கிளப்பியிருப்பாங்க. இந்தப் படத்துல அவரோட நடிப்பை பாத்து, “எங்க அக்கா மகளே இந்து…” அப்படின்னு இளைஞர்கள் உருக ஆரம்பிச்சாங்க. குறிப்பா, ‘வெல்வட்டா வெல்வட்டா…’ அப்படிங்கற பாட்டுல நடிகர் கவுண்டமணியுடன் இணைஞ்சு இவர் ஆடின டான்ஸ், ரசிகர்கள் கற்பனையே செஞ்சு பார்த்திடாத டூயட் காமினேஷன்.

வாழ்க்கைங்கிறது நாம எதிர்பார்க்கிற மாதிரியே எப்பவும் போகாது இல்லையா? அப்படித் தொடர்ந்து பரபரன்னு மேலே போயிட்டிருந்த நக்மாவின் சினிமா கரியர்ல… சட்டுன்னு ஒரு தொய்வு வந்துச்சு. தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவருக்கும் நக்மாவுக்கும் இடையே காதல் இருப்பதா கிசுகிசுக்கள் வர ஆரம்பிச்சது. இந்தக் காதலால்தான் நக்மாவின் திரைப்பயணம் ஸ்லோ ஆனதாவும் சொல்லப்பட்டுச்சு.

இந்த நிலையிலதான், அப்போ ஆனந்த விகடனுக்கு பேட்டியளிச்ச நக்மா, “இதுமாதிரியான காஸிப் செய்திகள் தன் கரியரைப் பாதிக்குது”னு வெளிப்படையா சொன்னாங்க. கூடவே, “எனக்கும் அந்த நடிகருக்கும் இடையில நட்போடு கூடிய புரிதல் இருந்தது உண்மைதான். ஆனா, இதை ரொம்ப கொச்சைப்படுத்தி பத்திரிகைகள்ல எழுதினாங்க. எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாததால, அதோட சீரியஸ்னெஸ் புரியல. ஆனா, ஒரு கட்டத்துல அது என் வேலையைப் பாதிக்கும்போதுதான் எனக்கு ரொம்ப கவலை வந்திடுச்சு” அப்படின்னு அந்தப் பேட்டியில ரொம்ப வேதனையோட பேசியிருந்தாங்க நக்மா.

தனக்கு ஏற்பட்ட இந்த செட் பேக்கை நினைச்சு அவங்க உடைஞ்சுபோய் அப்படியே நின்னுடல. இன்னும் வலிமையா களத்துக்குள்ள மீண்டு(ம்) வந்தாங்க. நடிகர் பிரபுவோட ‘பெரியதம்பி’, கார்த்திக்கோட ‘பிஸ்தா’, பாக்யராஜோட ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’னு நிறைய வெற்றிப் படங்கள்ல நடிச்சாங்க. அதுலயும், ஹீரோக்களுடன் டூயட் ஆடுறது, சில சீன்ஸ் மட்டுமே வந்து க்யூட்டா நடிச்சுட்டுப் போறதுனு இல்லாம, பன்முகத்தன்மையை வெளிப்படுத்துற வகையிலான பல கேரக்டர்களைத் தேந்தெடுத்து நடிச்சாங்க. அதுக்கு, உதாரணமா, ‘பிஸ்தா’ படத்துல Attitude காட்டுற அராத்து பொண்ணா வெண்ணிலா-ங்கிற கதாபாத்திரத்துல பின்னிப் பிரமாதப்படுத்தியிருப்பாங்க நக்மா. வடமொழி நடிகையா இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு அந்நிய உணர்வு ஏற்படாத வகையில, நடிப்பு, எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ்னு எல்லாத விதத்துலயும் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டாங்க.

பிஸ்தா படத்தில்

1998-ல் ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ படத்துல நடிச்சத்துக்கு அப்புறம், அடுத்த ஓராண்டுல நக்மா எந்தவொரு தமிழ்ப் படத்துலயும் நடிக்கல. ஆனா, 1999-ல வெளியான சூப்பர் ஹிட் படமான ‘படையப்பா’ படத்துல நடிகை சௌந்தர்யா நடிச்ச ‘வசுந்தரா’ கேரக்டருக்கு முதல்ல நடிக்க இருந்தது நக்மாதான். சில நாள்கள் அதுக்கான ஷூட்டிங்லயும் அவங்க கலந்துக்கிட்டாங்க. ஆனா, என்ன காரணம்னு தெரியல. அந்தப் படத்திலிருந்து விலகிட்டாங்க. அந்தப் படத்திலிருந்து விலகியதுக்கான காரணத்தையும் நக்மா இப்போவரை ஓபனா சொல்லலை.

சின்ன பிரேக்குக்கு அப்புறமா, 2000-ம் வருஷத்துல நடிகர் அஜித் நடிச்ச ‘தீனா’ படத்துல ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடலுக்கு நக்மா ஆடின டான்ஸ், ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸான ரீ-என்ட்ரி. எத்தனை வருஷங்கள் ஆனாலும் நக்மாவோட டான்ஸ் குவாலிட்டியும் கிரேஸும் குறையவே குறையாது அப்படிங்கறதை அந்தப் பாட்டு சொல்லாம சொல்லுச்சு. அதன்பிறகு, 2001-ல் ரிலீஸ் ஆன ‘சிட்டிசன்’ படத்துல சி.பி.ஐ அதிகாரி சரோஜினி ஹரிச்சந்திரன் கேரக்டர்ல ரொம்ப போல்டா மிரட்டியிருப்பாங்க நக்மா. இவங்களோட இந்த கேரக்டருக்கு நடிகை அனுராதா டப்பிங் பேசியிருந்தது, நிறையப் பேருக்குத் தெரியாத சேதி. இந்த சிட்டிசன் படம்தான் இவங்க நடிச்ச கடைசி தமிழ்ப் படமும்கூட.

இந்தக் காலகட்டத்துல சினிமால அதிகம் நடிக்காட்டியும், நக்மாவின் பர்சனல் விஷயங்களை மையப்படுத்தி, அவங்க பெயர் அடிக்கடி தலைப்புச் செய்திகள்ல வர ஆரம்பிச்சது. மிகப் பிரபலமா இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இவருக்குக் காதல் இருந்ததாவும், அவரை கல்யாணம் செஞ்சுக்கப் போறதாவும் அந்த சமயத்துல செய்திகள் வந்துச்சு. இதை வச்சு இவங்க ரெண்டு பேரையும் கடுமையா ட்ரோல் செஞ்சாங்க. ஆனா, இதைப் பத்தி நக்மா எந்தவொரு கருத்தையும் அப்போ தெரிவிக்கல. தன் மேல விழுந்த அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களையும் அசாத்தியமான உறுதியோட அமைதியா கடந்து போனாங்க.  

அதுக்கு அப்புறமா, நக்மா ஒரு சில வருஷங்கள் கன்னடா மற்றும் ஹிந்தி படங்கள்ல நடிச்சிட்டு கடைசியா போஜ்புரி, மராத்தி, பெங்காலி படங்கள்ல அதிகமா கவனம் செலுத்த ஆரம்பிச்சாங்க. குறிப்பா, போஜ்புரி சினிமா உலகோட முக்கியமான நட்சத்திரமாவும் அவங்க ஷைன் பண்ணாங்க. அந்த நேரத்துல பிரபலமா இருந்த போஜ்புரி நடிகர் ஒருவரை நக்மா கல்யாணம் செஞ்சுக்கப் போறதா அப்போ செய்திகள் வந்துச்சு.

நக்மா

அந்த சமயத்துலயும் அவங்க எந்தவொரு ஸ்டேட்மென்ட்டையும் கொடுக்கல. இப்படியே நாள்கள் நகர, ஆக்டிங் கரியரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியேற ஆரம்பிச்ச நக்மா, 2008-ம் வருஷத்துக்குப் பிறகு, சினிமா ஃபீல்டை விட்டே கம்ப்ளீட்டா விலகிட்டாங்க. அதுக்கப்புறமா அரசியல் களத்துல நுழைஞ்ச நக்மா, காங்கிரஸ் கட்சியில கட்சிப் பணி மேற்கொண்டு வர்றாங்க.

சினிமாவைப்போல, அரசியல் பயணமும் நக்மாவுக்கு அவ்வளவு எளிமையா இல்ல. 2004-ல் இருந்து நக்மா காங்கிரஸ் கட்சியில இருக்காங்க. 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல்ல மீரட் தொகுதியில காங்கிரஸ் கட்சியின் சார்பா நின்னு தோல்வியைத் தழுவினாங்க. 2015-ம் வருஷம் இவங்களுக்கு ஆல்இந்தியா பெண்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைச்சு, சில ஆண்டுகள் அதைக் கவனிச்சு வந்தாங்க. ஆனா, அதுக்கு அப்புறம் சொல்லிக்கிற அளவுக்கு, முக்கியமான பொறுப்பு எதுவும் தனக்கு வழங்கப்படலைங்கிற ஆதங்கம் நக்மாவுக்கு இருக்குது. இதுதொடர்பாக, சில முறை வெளிப்படையா தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலதான் அங்கம் வகிக்கிறாங்க. இப்போ, மும்பை ரீஜினல் காங்கிரஸ் கமிட்டியோட வைஸ் பிரசிடன்ட்டா இருக்காங்க.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

நக்மாவுக்கு இப்போ 49 வயசு. இதுவரை திருமணமே செஞ்சுக்காம வாழுற இவங்ககிட்ட, ‘எப்போ கல்யாணம் செஞ்சுக்கப் போறீங்க?’ன்னு செய்தியாளர்கள் கேட்டுக்கிட்டேதான் இருக்காங்க. “திருமணம் செஞ்சுக்கக் கூடாதுங்கிற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. கல்யாணம், குழந்தைகள்னு குடும்ப வாழ்க்கையை அமைச்சுக்கணும்னுதான் நினைக்கிறேன். சில சமயங்கள்ல நமக்கும் ஒரு துணை, குடும்பம் வேணும்னு உணர்கிறேன். அது ஏனோ இப்ப வரை கைகூடல“னு ரொம்ப உணர்வுபூர்வமா பதில் சொல்லிருக்காங்க நக்மா.

ஒருபக்கம் அரசியல் பணி, மறுபக்கம் தன் குடும்பம்னு இப்பவும் நக்மா ரொம்பவே பிஸிதான். குறிப்பா, நடிகை ஜோதிகா மும்பையில செட்டில் ஆனதுக்குப் பிறகு, நக்மா தன் சிஸ்டர்ஸ் ஜோதிகா, ரோஷிணியோட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்றாங்க. தன் சிஸ்டர்ஸோட குழந்தைங்களுக்கு பாசக்கார பெரியம்மாவாவும் செல்லம் கொஞ்சறாங்க.

நக்மா

தன் ஃபேமிலி போட்டோஸை அப்பப்போ சோஷியல் மீடியாவுல ஷேர் பண்றதும் இவங்க வழக்கம். அதனால, சினிமால நடிக்காட்டியும், இன்னும் மக்களுடன் கனெக்ட்டடா இருக்கிறதால, தமிழ் ரசிகர்களும் நக்மாவை இன்னும் சிலாகிச்சுகிட்டுதான் இருக்காங்க.

நக்மாவோட வாழ்க்கை, போராட்டங்கள் நிறைஞ்சதாகவும், மேடு பள்ளங்களால சூழப்பட்டதா இருந்தாலும், ஒவ்வொரு முறையும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானாலும், கேலி மற்றும் கிண்டல்களை எதிர்கொண்டாலும், அத்தனையையும் சமாளிச்சு அடுத்தடுத்து பயணப்பட்டுக்கிட்டே இருக்கிற துணிச்சலும் நம்பிக்கையும்தான் நக்மாவின் பெரிய பலமே. விழுந்ததுக்கு அப்புறமும் வலிமையோட மீண்டும் எழுவது நக்மாவுக்கு ஒன்னும் புதுசில்லையே! நக்மா, ஆல்வேஸ் ராக்கிங் ஸ்டார் & போல்டு விமன்னு கரவொலியுடன் சொல்ல, பெரும் ரசிகர் படை இன்றளவும் உண்டு!

– நாயகிகள் வருவார்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.