வெற்றிமாறனின் ‘விடுதலை’யை மறக்க முடியுமா என்ன! சூரியின் திரைப்பயணத்தில் அவரை கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம். முதல் பாகம் வெளியாகி பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கவனம் ஈர்த்தது. இளையராஜாவின் இசையும், பாடல்களும் மனதை வருடின.
முதல் பாகம் வெளியாகும் முன்னரே இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அதன் படி ‘விடுதலை 2’வின் படப்பிடிப்பும் இப்போது நிறைவு கட்டத்தை நோக்கி வருகிறது. இந்த இரண்டாம் பாகம், வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி திரைக்கு வருமென அறிவித்து விட்டதால், இந்த சூழலில் படப்பிடிப்பு நிலவரம் குறித்து விசாரித்தோம்.
முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த சம்பவங்கள் பலவும் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய உண்மைச் சம்பவங்களை நினைவூட்டின.
படத்தின் கதைக்களம், அதன் மாந்தர்கள், அரசியல் பின்புலம் போன்றவற்றைக் கட்டமைத்து, அந்த உலகத்தை நமக்கு அறிமுகம் செய்யும் ஒன்றாக உருவாகியிருந்தது. அதைப் போல, இரண்டாம் பாகமும் ரெடியாகியுள்ளது. நடிகர்கள் சூரி தவிர, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல் என பலரும் முதல் பாகத்தில் இருந்தனர். இந்த பாகத்தில் மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் என பலரும் இணைந்துள்ளனர்.
‘வழி நெடுக காட்டுமல்லி’ போல…
எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்தில் பெருமாள் வாத்தியாராக விஜய்சேதுபதி நடிக்கிறார். பார்ட் 2-வில் பெருமாள் வாத்தியார் குறித்தான ஃப்ளாஷ்பேக் தான் மெயின் கதை. வாத்தியாரின் வாழ்க்கை எப்படித் தொடங்கியது, அவர் எப்படி வாத்தியாராக மாறினார், அவர் புரிந்து கொண்டது என்ன? என முதல்பாகத்தில் நாம் பார்த்ததன் தொடர்ச்சிதான் இந்தப் படம் என்கின்றனர். விஜய்சேதுபதியின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். அவரது இளமை காலக் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளனர். முதல் பாகத்தில் இளையராஜாவின் ‘வழி நெடுக காட்டுமல்லி’ தாலாட்டியது போல, இதிலும் ஒரு பாடல் இருக்கிறது. விஜய் சேதுபதி- மஞ்சு வாரியரின் காதல் பாடல் அது.
சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர், தென்காசி பகுதிகளில் சில வாரங்கள் நடைபெற்றது. அங்கே விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் காம்பினேஷனும், பீட்டர் ஹெய்னின் சண்டை இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டன. இப்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘விடுதலை’ முதல் பாகத்தில் ரயில் விபத்து காட்சிகள் அரங்கம் அமைத்து படமாக்கினார்கள். அந்த காட்சிகளும் படத்தில் திருப்புமுனையாக இருந்தது.
இப்போது அதே இடத்தில் (வண்டலூர் அருகே ) 1960களில் உள்ள கிராமம் போல் செட் அமைத்துள்ளனர். அதில் கிராமத்தில் ஏராளனமான வீடுகள், பள்ளிக்கூடம், கோவில் ஆகியவை அமைத்துள்ளனர். விஜய்சேதுபதி, மஞ்சுவாரியர், கிஷோர், போஸ்வெங்கட் ஆகியோர் அங்கு நடித்து வருவதாகவும், படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்கள் நடைபெறும் என்றும் இந்த ஷெட்யூலோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது என்றும் தகவல்.
இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கும். பிக்பாஸ் படப்பிடிப்புக்கு நடுவே விஜய்சேதுபதி டப்பிங் பேசி கொடுத்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41