புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுக்கிறது. காங்கிரஸ் கட்சியோ தவறுகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது என்று பாஜகவை காங்கிரஸின் பவன் கெரா சாடியுள்ளார். மல்யுத்த வீரர்களின் போராட்டம் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் அரசியல் சதி என்ற பிரிஜ் பூஷணின் கருத்துக்கு பதிலடியாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ” யாரெல்லாம் தவறு செய்கிறார்களோ அவர்களுடன் பாஜக நிற்கிறது. தவறு செய்பவர்களும் பாஜகவுடன் சேர்கிறார்கள். யாருக்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அவர்களுக்காக காங்கிரஸ் போராடுகிறது. அவர்களின் குரல்களை உயர்த்துகிறது. எதிர்காலத்திலும் காங்கிரஸ் இதைச் செய்யும் அதனால் தான் பாதிக்கப்பட்டவர்கள் காங்கிரஸை விரும்புகிறார்கள்.
பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆறு மல்யுத்த வீராங்கனைகள் வழக்கு பதிவு செய்திருந்தனர். அவர் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பார்த்தீர்களா? இவ்வாறு பேசுவதற்கு அவருக்கு எவ்வாறு தைரியம் வருகிறது? எங்களின் மகள்களுடன் நின்றதற்காக, நிற்பதற்காக, நிற்கப்போவதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.
எங்கள் மகள்களுடன் நின்றதற்காக நாங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டோம். அவர்கள் தான் வருத்தப்படுகிறார்கள். ஹூடா குடும்பத்தினர் தங்களின் குரலை எழுப்பியதன் மூலம் என்ன தவறு செய்து விட்டார்கள்?. அதுதான் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடன் (மல்யுத்த வீரர்கள்) நிற்காவிட்டால் அரசியலில் இருந்து என்ன பயன்?” இவ்வாறு கெரா தெரிவித்தார்.
முன்னதாக, சனிக்கிழமை காலையில், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷண், “வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதன் மூலம் தனக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு அரசியல் சதி என்று நிரூபனமாகியிருக்கிறது. அதன் பின்னணியில் காங்கிரஸ் இருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரியில் ஜந்தர்மந்தர் மைதானத்தில் நடந்த போராட்டம் விளையாட்டு வீரர்களின் போராட்டம் இல்லை. அதற்கு பின்னால் பூபேந்திர ஹூடா தலைமையிலான காங்கிரஸ் இருந்தது. தனது முடிவுக்காக காங்கிரஸ் வருந்தும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே டெல்லி போராட்டத்தில் முன்னணியில் இருந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து வினேஷ், ஜுலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பஜ்ரங் புனியா, அகில இந்திய கிஷான் காங்கிரஸின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.