முன்பின் தெரியாதவர்களின் நட்பாகப் பழகி நம்பவைக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள் இந்தப் பெண்கள். குளிர்பானம் வாங்கி அதில் சயனைடை கலக்கிக்கொடுத்து நகைகள், பணத்தைத் திருடிச் செல்லும் சீரியல் கில்லர்கள்!
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், தெனாலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், இதுவரை 3 பெண்கள் உட்பட 4 பேரைக் கொலைசெய்திருக்கின்றனர்.
முனகப்பா ரஜினி, மதியலா வெங்கடேஸ்வரி, குல்ரா ரமணம்மா ஆகிய மூன்று பெண்களை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. காவலர்கள் கூறுவதன்படி, இவர்கள் கொடுக்கும் சயனைடு கலந்த பானத்தைக் குடித்த உடனேயே பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைந்துவிடுவர். அவர்களின் நகைகளையும் பணத்தையும் திருடிக்கொண்டு இந்தப் பெண்கள் தப்பித்துவிடுவர்.
கடந்த ஜூன் மாதம் இந்தப் பெண்கள் நகுர் பி என்ற பெண்ணை கொலை செய்துள்ளனர். மேலும் இருவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர்.
இந்த மூவரில் மதியலா வெங்கடேஸ்வரி (32) இதற்கு முன்னர் கம்போடியாவில் சைபர் க்ரைமில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்களிடம் இருந்து சயனைடு மற்றும் பிற ஆதாரங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் மூவருடன் சயனைடு வழங்கிய நபரையும் கைதுசெய்துள்ளனர்.
மூன்று பெண்களும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் முன்பின் தெரியாத நபர்களிடம் பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்!