வரவிருக்கும் ஐபிஎல் 2025 ஏலத்தில் பல பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளது. ஒவ்வொரு அணியிலும் உள்ள முக்கியமான வீரர்கள் வேறு சில அணிகளுக்கு மாற உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஐபிஎல் 2024 போட்டிகள் முடிந்த சில நாட்களில் இருந்து ஐபிஎல் 2025 ஏலம் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, குஜராத், லக்னோ போன்ற அணிகள் ஏலம் தொடர்பாக பல முக்கிய கருத்துக்களை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தி இருந்தது. ஐபிஎல் 2025 ஏலத்திலும் சில மாற்றங்களை செய்ய உள்ளது பிசிசிஐ.
லக்னோ அணியில் நீடிப்பாரா கேஎல் ராகுல்?
லக்னோ அணியில் கேஎல் ராகுலின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும் ராகுலுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அடுத்த ஆண்டு அவர் லக்னோ அணியுடன் பயணிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற எல்எஸ்ஜியின் ஜெர்சி வெளியீட்டு விழாவில், சஞ்சீவ் கோயங்காவிடம் கேஎல் ராகுலின் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுல் எனது குடும்பத்தில் ஒருவர் என்று தெரிவித்து இருந்தார். மேலும் லக்னோ அணியின் புதிய மெண்டாராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார்.
ஆர்சிபி அணியில் கேஎல் ராகுல்?
லக்னோ அணியில் இருந்து வெளியேறி கேஎல் ராகுல் ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது கேப்டனாக இருக்கும் பாப் டு பிளெசிஸ்க்கு பதில் அவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி 2024ல் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது கேஎல் ராகுல் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு வந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “ஆர்சிபி கேப்டன்” என்று கோஷமிட்டனர். இதன் மூலம் பெங்களூரு ரசிகர்கள் அவரை தற்போதே கேப்டனராக ஏற்றுக்கொண்டனர் என்பது தெரிகிறது.
“RCB Captain, KL Rahul” chants going on at Chinnaswamy pic.twitter.com/Ni6Y7yXWn0
— Guru Gulab (@madaddie24) September 7, 2024
ஐபிஎல் 2013 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேஎல் ராகுல் அறிமுகமானார். பிறகு 2014 ஐபிஎல்லில் 1 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை வாங்கியது. பின்னர் 2016 சீசனில் மீண்டும் ஆர்சிபி அணியில் இணைந்தார். 2022 ஆம் ஆண்டு முதல் எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் கேஎல் ராகுல்.