திருவனந்தபுரம்: நாட்டின் தலைநகர் டெல்லியில் முதன் முதல் மெட்ரோ ரயில் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இ.ஸ்ரீதரன். சிறந்த பொறியாளரான ஸ்ரீதரன், ‘மெட்ரோ மேன்’ என்றே புகழப்படுகிறார். தற்போது இவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கேரளாவின் புகழ்பெற்ற பாரதபுழா ஆற்றின் குறுக்கே தற்போது பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பாலம் அறிவியல்பூர்வமற்ற முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் பாரதபுழா ஆற்றின் கரையோரம் உள்ள மும்மூர்த்தி கோயில்களை இந்த பாலம் பிரித்துவிடும். ஆற்றின் திருநாவயா பகுதியில் வடக்கு கரையில் உள்ள விஷ்ணு கோயில், தவனூர் பகுதியின் தென் கரையில் உள்ள சிவன் மற்றும் பிரம்மா கோயில்களை இந்தப் பாலம் பிரித்து விடும். இது சமூக, மத ரீதியாக இந்துக்களின் உணர்வுகளை பாதிக்கும்.
தற்போது கட்டப்படும் பாலம்பொறியியல் விதிகளை மீறுவதாகவும் அமைந்துள்ளது. அத்துடன், ‘கேரள காந்தி’ என்றழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் கே.கேலப்பனுடைய சமாதி போன்ற வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்கும் இந்தப் பாலம் தொந்தரவாக அமையும். எனவே, பாலத்தின் கட்டுமானத்தை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும்.
மும்மூர்த்தி கோயில்கள் அமைந்துள்ள பகுதி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, பாலத்தின் விளிம்பை 200 மீட்டர் அளவுக்கு மாற்றி அமைக்க வேண்டும். பாலத்தை மாற்றி அமைப்பதற்காக என்னுடைய வடிவமைப்பை கேரள அரசு முறைப்படி பரிசீலிக்க மறுத்துள்ளது. அத்துடன் பாலத்தின் நீளத்தை குறைப்பதன் மூலம் அது நீடித்து நிலைக்கும் என்றும் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அரசிடம் எடுத்துரைத்தேன். ஆனால், எந்தப் பலனும் இல்லை.
இதற்காக தொழில்நுட்ப ஆலோசனைகளை கேரள அரசுக்கு இலவசமாக வழங்க தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக கேரள முதல்வர் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சரிடம் கடந்த 2022-ம் ஆண்டே கடிதம் வழங்கி இருக்கிறேன். ஆனால், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, வேறு வழியின்றி உயர் நீதிமன்றத்தை நாடுகிறேன். எனவே, தற்போது கட்டப்படும் பாலத்தை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஏ.முகமது முஸ்டாக், நீதிபதி எஸ்.மனு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதரன் வழக்கை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். எனினும், இதுதொடர்பாக மாநில அரசு விரிவான பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘‘இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதற்கு முன்னர், பாலம் கட்டுவதால் பொதுமக்களின் உணர்வுகள் உண்மையாகவே பாதிக்கப்படுகிறதா என்பதை முதலில் ஆராய வேண்டும். இந்த வழக்கை தற்போதைக்கு ஏற்கவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக வரும் 9-ம் தேதி அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். அன்றைய தினம் வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்று உத்தரவிட்டனர்.