ஹிசார்: பாஜக வாய்ப்பு அளிக்காததால், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நாட்டின் கோடீஸ்வர பெண் சாவித்ரி ஜிண்டால் அறிவித்துள்ளார்.
நாட்டின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். ஒ.பி.ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹிசார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் 67 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஆனால் அதில் சாவித்ரியின் பெயர் இடம்பெறவில்லை. குறிப்பாக ஹிசார் தொகுதியில் தொடர்ந்து எம்எல்ஏ-வாக உள்ளவரும் சுகாதார அமைச்சருமான கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சாவித்ரி ஜிண்டாலின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அவரது வீட்டில் கூடினர். அப்போது வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என சாவித்ரியை வலியுறுத்தினர். இதையடுத்து, உங்கள் விருப்பப்படி தேர்தலில் போட்டியிடுகிறேன் என அவர் அறிவித்தார். ஆனால் சுயேச்சையாக போட்டியிடுவாரா அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சி சார்பில் போட்டியிடுவாரா என தெரியவில்லை.
பின்னர் சாவித்ரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஹிசார் பகுதிமக்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என என் குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதை நான் கேட்டுத்தான் ஆக வேண்டும்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவீர்களா என கேட்கிறீர்கள்.இதுகுறித்து என் ஆதரவாளர்கள்தான் முடிவு செய்வார்கள். பாஜகவில் என் மகனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேன். ஆனால்அக்கட்சியில் நான் உறுப்பினராக இல்லை. பாஜக மீது எனக்கு கோபம் இல்லை. வேட்பாளர் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் எடுத்துள்ள முடிவை ஏற்கத்தான் வேண்டும்” என்று தெரிவித்தார்.