புதுடெல்லி: ரூ.84,000 கோடி மதிப்பிலான (10 பில்லியன் டாலர்) அதானி-டவர் சிப் ஆலை அமைப்பதற்கு மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், மத்திய அரசு இன்னும் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.
இஸ்ரேலின் டவர் செமிகண்டக்டர் நிறுவனமும், அதானி குழுமமும் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தின் பன்வேலில் செமிகண்டக்டர் தயாரிக்கும் மெகா திட்டத்தை செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ரூ.58,763 கோடியும்,இரண்டாவது கட்டத்தில் ரூ.25,184கோடியும் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம்,15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதானி-டவர் சிப் ஆலை திட்டத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தொழில்களுக்கான மகாராஷ்டிர அமைச்சரவையின் துணைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
செமிகண்டக்டர்: இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “ அதானி-டவர் சிப் ஆலையில் அனலாக் மற்றும் கலப்பு சமிக்ஞைகள் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படும். முதல் கட்டத்தில் மாதத்துக்கு 40,000, இரண்டாவது கட்டத்தில் மாதத்துக்கு 80,000 சிப்கள் தயாரிக்கும் செயல்திறன் கொண்டதாக இந்த ஆலை இருக்கும்” என்றார்.
மத்திய அரசு ஒப்புதல்? மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதானி-டவர் சிப் திட்டத்துக்கான அனுமதியை அம்மாநில அமைச்சரவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மத்திய அரசு இன்னும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்திய செமிகண்டக்டர் மிஷனின் ரூ.76,000 கோடிமானியத்தின் கீழ் சலுகைகளைப் பெற அதானி-டவர் விண்ணப்பித்துள்ளது.