CNG Bus: சிஎன்ஜி பேருந்துகளால் ஒரே மாதத்தில் ரூ.7 லட்சம் சேமிப்பு; சோதனை ஓட்டத்தில் கிடைத்த வெற்றி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் சோதனைமுறையில் இயக்கப்பட்டு வரும் மாற்று எரிபொருள் பேருந்துகளால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.7.65 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் கடந்த ஜுன் மாதம் முதல் சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி (CNG), எல்.என்.ஜி (LNG) மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பல பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் சேமிக்கப்பட்ட தொகை 7.65 லட்சம் ரூபாய் என்கிறது போக்குவரத்துறை.

பொதுவாக மாநகரப் பேருந்துகள் ஒரு லிட்டர் டீசலில் 4.76 கி.மீ வரைச் செல்லும். இதனைக் கணக்கிட்டால் ஒரு கிலோ மீட்டருக்கு 19.03 ரூபாய் செலவு. இதுவே, சி.என்.ஜி பேருந்தை இயக்கினால் ஒரு கிலோமீட்டருக்கான செலவு 18.47 ரூபாய் ஆகிறது. இது நகரம், புறநகரில் மட்டும் ஓடும் சென்னை மாநகரப் பேருந்துகளின் கணக்கு.

MTC Bus

மற்ற போக்குவரத்து கழகங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளை செலுத்தும்போது, ஒரு கிலோமீட்டருக்கு டீசல் என்றால் 15.80 ரூபாயும் (மைலேஜ் காரணமாக செலவு குறைகிறது) சி.என்.ஜி என்றால் 11.24 ரூபாயும் செலவாகும். ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஏற்றபடி இதன் சேமிப்புத் தொகை மாறுபடும்.

சேலத்தில் சி.என்.ஜி மூலம் சேமிக்கப்பட்ட தொகை ரூ.2.08 லட்சம். இதேப்போல திருநெல்வேலி, கும்பகோணம், மதுரை, கோவை, விழுப்புரம் கோட்டங்களில் முறையே ரூ.1.58 லட்சம், ரூ.1.25 லட்சம், ரூ.1.58 லட்சம், ரூ.46,690, ரூ.68,064 என ஒரு மாதத்தில் மொத்தமாக ரூ.7.65 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.

சோதனைமுறை ஓட்டத்திலே நல்ல பலன் தென்பட்டிருக்கிறது. இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.