Doctor Vikatan: என் வயது 42. எனக்கு அடிக்கடி பாதங்களில் வலி வருகிறது. கெண்டைக்கால் சதை பிடித்து இழுத்துக்கொள்கிறது. வலி வரும்போது வெந்நீரில் உப்பு சேர்த்து கால்களை ஊறவைத்தால் சரியாகிவிடும் என்று சொல்கிறார்களே… அது எந்த அளவுக்கு உண்மை? எப்சம் சால்ட் உபயோகிப்பது தீர்வாகுமா?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.
பாதங்களின் தசைகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதால் வெந்நீர் மிகவும் நல்லது. ஆனால், உப்பு, எப்சம் உப்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதில் சிலர் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் இதில் முக்கியம்.
கால்களில் ஏற்பட்ட வீக்கம் குறைய, உப்பு சேர்த்த வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்திருக்கலாம். அதுவே நரம்புகளின் உணர்ச்சித்தன்மையை அதிகரிக்க எப்சம் சால்ட் பயன்படுத்தலாம். எப்சம் சால்ட் என்பது மெக்னீசியம் உப்பு. கெண்டைக்கால் தசைப்பிடிப்புக்கு எப்சம் சால்ட் பெரிதும் உதவும். ஆனால், அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். சிறிது எப்சம் சால்ட்டை சிறிதளவு வெந்நீரில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்தால், கெட்டியான பால் போன்ற பதத்துக்கு வரும். அதைக் கால்களில் தடவிக் கொள்ள வேண்டும்.
இப்படித் தடவிக் கொண்டு 10 முதல் 15 நிமிடங்கள் கால்களை உலர விட வேண்டும். அந்த இடைவெளியில், மெக்னீசியம் சால்ட்டானது சருமத்தினுள் ஊடுருவும். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிடலாம். இதை வெறும் 15 நிமிடங்கள் வைத்திருந்தால் போதுமா, ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டுமா அல்லது இரவு முழுவதும் வைத்திருக்கலாமா என்பதெல்லாம் அவரவர் பிரச்னைக்கேற்ப மாறும். அதை உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொல்வார்.
உதாரணத்துக்கு, கெண்டைக்கால் தசைப்பிடிப்புக்கு 20 முதல் 50 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும். அதுவே, நரம்பு பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மருத்துவர் இரவு முழுவதும் வைத்திருக்க அறிவுறுத்துவார். அது எந்த மாதிரியான பாதிப்பு, பாதிக்கப்பட்டவரின் வயது, பாதிப்பின் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்தும் வேறுபடும். அடிக்கடி கெண்டைக்கால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது என்றால் மருத்துவரைச் சந்தித்து அதற்கான காரணங்கள் அறிந்து, சிகிச்சை எடுக்க வேண்டும்.
எனவே, பாரம்பர்ய மருத்துவம் என்றாலும் மற்றவர்களுக்குப் பலனளிப்பதால் உங்களுக்கும் பலன் தரும் என்ற நம்பிக்கையில் நீங்களாகப் பின்பற்றாமல், மருத்துவ ஆலோசனையோடு செய்வது பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.