இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் மீது பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் ‘பிளேயிங் இட் மை வே’ புத்தகத்தில் கிரேக் சேப்பல் தன்னை இந்திய அணியின் கேப்டனாக்க முயன்றது முதல் பேட்டிங் ஆர்டரை மாற்றியது வரை பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதுவும் டிராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தன்னை அந்த பதவிக்கு வருமாறு பேசியதாகவும், அதனை மறுத்ததால் பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சச்சின் எழுதிய புத்தகம்
‘பிளேயிங் இட் மை வே’ புத்தகத்தில், 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் செய்த தவறுகளை எல்லாம் சச்சின் பட்டியலிட்டுள்ளார். “ஒருநாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் என் வீட்டுக்கு வந்தார். அப்போது என்னுடன் மனைவி அஞ்சலி இருந்தார். வீட்டுக்கு வந்த கிரேக் சேப்பல், என்னிடம் இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்குமாறு கூறினார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார். அவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் என்னை கேப்டனாக பொறுபேற்க வருமாறு அழைத்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் கேப்டனாக இருந்தால், அவர் பயிற்சியாளராக இருந்து இந்திய கிரிக்கெட்டை பல ஆண்டுகள் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறினார்.” அவரின் பேச்சு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.” என தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
சச்சினை முடக்க சதி
” நான் கிரேக் சேப்பலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டேன். அதனால் அவர் என்மீது அதீத கோபத்தில் இருந்தார். அதன்பின்னர் இந்திய அணியின் என்னுடைய பேட்டிங் ஆர்டரை மாற்றினார். பல சமயங்களில் என்னை பலவீனப்படுத்தும் வகையில் கிரேக் சேப்பலின் நடத்தை இருந்தது. என்னை அணியில் இருந்து நீக்கவும் அவர் விரும்பினார்” என்றும் சச்சின் டெண்டுல்கர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரின் இந்த புகார் கிரிக்கெட் வட்டாரத்தில் இப்போது மீண்டும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் சாதனைகள்
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பல அரிய சாதனைகளை செய்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அவர், 100 சதங்களையும் விளாசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக உள்ளார். 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றவுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முதன்முதலில் ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.