`தாம்பத்திய உறவு மீதான ஆர்வம் எனக்குக் குறைவாக இருக்கிறது; உச்சக்கட்டம் அடைவதிலும் எனக்கு பிரச்னை இருக்கிறது’ – இப்படியெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய தம்பதியினர். இந்த வெளிப்படைத்தன்மை ஆரோக்கியமான மாற்றம் மட்டுமல்ல, அவர்களுடைய பிரச்னைகளை சரிசெய்யும் வழியும்கூட. [email protected]ல் நம்முடைய வாசகி ஒருவர், `நான் டிப்ரஷன் மற்றும் ஆங்சைட்டிக்கான மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். தாம்பத்திய உறவின்போது எனக்கு ஆர்கசத்தை அனுபவிக்கவே முடியவில்லை. மனநல மருத்துவரிடம் பிரச்னையை சொன்னேன். அவர் வேறு மருந்துகள் எழுதிக்கொடுத்தார். அதைச் சாப்பிட்டும் எனக்குப் பலன் கிடைக்கவில்லை. என் பிரச்னை தீர வழிகாட்டுங்கள்’ என்று கேட்டிருந்தார். வாசகியின் பிரச்னைக்கான தீர்வை சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
“மனநோயும் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னையை ஏற்படுத்தும்; மனநோய்க்கான மருந்துகளும் தாம்பத்திய உறவில் பிரச்னையை ஏற்படுத்தும். இந்த மருந்துகள் செக்ஸில் ஆர்வத்தைக் குறைக்கும். அப்படியே ஈடுபட்டாலும் உச்சக்கட்டம் அடைய முடியாமல் தவிக்க வைக்கும். இவற்றைத் தவிர, கணவரால் முழுமையாகத் தூண்டப்படாத, குறிப்பாக பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸை அறிந்து தூண்டப்படாத பெண்களுக்கும் ஆர்கசம் அடைவதில் தடங்கல் இருக்கும். அதனால், மேலேயுள்ள மூன்றில் எந்தப் பிரச்னை காரணமாக தன்னால் ஆர்கசம் அடைய முடியவில்லை என்பதை கேள்வி அனுப்பியுள்ள வாசகி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மனநிலையும், அதற்கான மருந்துகளும்தான் அவருடைய பிரச்னைக்கு காரணமென்றால், ஆன்டி டிப்ரஷனுக்கான மருந்துகளிலேயே செக்ஸ் ஆர்வத்தைக் குறைக்காத மருந்துகளை மருத்துவரிடம் கேட்டு வாங்கி சாப்பிடலாம்.
ஒருவேளை, இதன் பிறகும் அவருக்கு ஆர்கசம் அடைவதில் சிக்கல் இருக்கிறது என்றால் தூண்டுதல் போதாமை பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். ஒரு பெண் உச்சக்கட்டம் அடைய வேண்டுமென்றால் கணவரால் பதினான்கு நிமிடங்கள் தூண்டப்பட வேண்டும். ஆண்களோ ஐந்தே நிமிடத்தில் ஆர்கசம் அடைந்துவிடுவார்கள். அதனால், மனைவி ஆர்கசம் அடைவதுபற்றி பல இந்திய ஆண்கள் அக்கறை கொள்வதில்லை. இந்த வாசகியின் பிரச்னையில், அவருடைய மனநல பிரச்னையும் அதற்காக எடுத்துக்கொள்கிற மாத்திரையும் எந்தளவுக்கு செக்ஸில் ஆர்வத்தைக் குறைக்குமோ, அதே அளவுக்கு தூண்டுதல் போதாமையும் ஆர்கசம் அடைய முடியாமல் செய்யலாம்.
பல காலங்களாக உலகம் முழுக்கவே பெண்களின் பாலியல் பிரச்னைகளுக்கான மருந்துகள் இல்லாமல்தான் இருந்தன. 2010-ல்தான் முதல் முறையாக வாய் வழியாகச் சாப்பிடக்கூடிய மருந்தைக் கண்டுபிடித்தார்கள். 4 வருடங்களுக்கு முன்னால் ஊசி மருந்தும் கண்டுபிடித்தார்கள். உறவு வைத்துக்கொள்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் இந்த ஊசியைச் செலுத்திக் கொண்டால் அதிக ஆர்வமும் கிளர்ச்சியும் கிடைக்கும். இந்த மருந்தை தற்போது அமெரிக்காவில்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாசகியின் பிரச்னையை பொறுத்த வரைக்கும், அதைச் சரி செய்வதற்கான மருந்துகளும் இருக்கின்றன. பயிற்சிகளும் இருக்கின்றன. உடனடியாக அவர் பாலியல் மருத்துவரை அணுகுவது நல்லது” என்கிறார் டாக்டர் காமராஜ்.