எதிர்க்கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் நாட்டைவிட்டு வெளியேறினார்- வெனிசூலாவில் பரபரப்பு

காரகஸ்:

வெனிசூலா நாட்டில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சி சார்பில் அதிபர் நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கான்சலஸ் மற்றும் 8 பேர் போட்டியிட்டனர். எனினும் நிகோலஸ் மதுரோவுக்கும், எட்மண்டோ கான்சலசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களை எதிர்க்கட்சி கூட்டணி நிராகரித்துள்ளது. பல மேற்கத்திய நாடுகளும் இந்த முடிவை ஏற்கவில்லை.

மூன்றில் இரண்டு பங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்து எதிர்க்கட்சியினரால் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட தரவுகள், கான்சலஸ் வெற்றி பெற்றதை காட்டுகின்றன. இதனால் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

வெனிசுலாவில் தேர்தல் முடிவுகளின் இறுதிச் சான்றாக மின்னணு வாக்குப்பதிவு எந்திர தரவுகள் கருதப்படுகின்றன. முந்தைய அதிபர் தேர்தல்களில், தேர்தல் ஆணையம் 30,000-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களின் முடிவுகளை ஆன்லைனில் வெளியிட்டது. ஆனால் மதுரோவின் கட்டுப்பாட்டில் உள்ள குழு இந்த முறை எந்த தரவையும் வெளியிடவில்லை. எதிர்க்கட்சியினரால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், எதிர்க்கட்சி வேட்பாளர் கான்சலஸ் (வயது 75) மீது குற்றவியல் நடவடிக்கையை அரசு கையில் எடுத்தது. தேர்தல் நாசவேலையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தேர்தல் நாசவேலை தொடர்பான விசாரணைக்காக கான்சலஸ் மூன்று முறை ஆஜராக தவறியதால் அவரைக் கைது செய்யவேண்டும் என அட்டர்னி ஜெனரல் டாரெக் வில்லியம் சாப் வலியுறுத்தினார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணையத்தில் பகிர்ந்த தகவல் போலியானவை என்றும் தேர்தல் ஆணையத்தின் பணியை குறைத்து மதிப்பிடும் முயற்சி என்றும் அவர் கூறினார்.

விசாரணைக்கு ஆஜராகாததால் கான்சலசை கைது செய்ய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே, எட்மண்டோ கான்சலஸ் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் ஸ்பெயினில் தஞ்சம் கோரியிருப்பதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில், “தேர்தலுக்கு பிறகு வெளியில் எங்கும் வராத கான்சலஸ் கடந்த சில நாட்களாக கராகஸில் உள்ள ஸ்பெயின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். நாட்டில் அரசியல் அமைதியை மீட்டெடுக்க உதவுவதற்காக, கான்சலஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் முடிவு செய்தது” என்று கூறியுள்ளார்.

ஆனால் கான்சலஸ் தரப்பில் இருந்தோ, வெனிசுலா எதிர்க்கட்சி தரப்பில் இருந்தோ இதுவரை கருத்து தெரிவிக்கப்படவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.