கொல்கத்தா: கொல்கத்தாவில் கடந்த ஆக.9-ம்தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையொட்டி, கடந்த புதன்கிழமை இரவு ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறியதாவது: இந்த சம்பவத்தை அடுத்து எனது மகளின் உடலை பதப்படுத்த நினைத்தோம். ஆனால், அதை செய்ய விடாமல் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. 300-லிருந்து 400 போலீஸார் எங்களை சூழ்ந்து கொண்டனர். மகளின் உடலை வீட்டுக்கு எடுத்துவந்தபோது வீட்டு வாசலில் 300 போலீஸார் குவிந்திருந்தனர். இதனால் உடனடியாக இறுதிச்சடங்கு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம். மேலும், எனது மகள் தற்கொலைசெய்து கொண்டதாக மருத்துவமனை அதிகாரிகள் பொய் சொன்னது ஏன் என்று புரியவில்லை. பிரேதப் பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லும்போது எங்களை பார்க்கக்கூட முதலில் அனுமதிக்க வில்லை. 3 மணி நேரத்துக்கு பிறகே அனுமதி கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பெண்ணின் அத்தை கூறுகையில், ‘‘பெற் றோரின் முன்னிலையில் பெண்ணின் உடல் கிடத்தப்பட்டிருந்த போது போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்றார். இதுதான் போலீஸின் மனிதநேயமா? இறுதிச்சடங்கு முடியும்வரை 300-லிருந்து 400போலீஸார் எங்களைச் சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். இறுதிச்சடங்கு முடிந்த அடுத்த நிமிடமேஒரு போலீஸ்கூட கண்ணில்பட வில்லை. பாதிக்கப்பட்ட குடும்பம் என்ன செய்யும்? அவர்கள் எப்படிவீடு திரும்புவார்கள்? இதைப்பற்றியெல்லாம் போலீஸுக்கு எந்த அக்கறையும் இல்லை. போலீஸ் தனது கடமையை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டதாகக் கூறியது. இதற்குப் பெயர்தான் கடமையை நிறைவேற்றுவதா?’’ என்றார்.