புதுடெல்லி: நம் நாட்டில் 20 கோடி பேர் சோம்பலான வாழ்க்கை வாழ்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி எந்த அளவில் உள்ளது என்ற ஆய்வை ஆசியா பசிபிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் அண்ட் சொசைட்டி ஆக்ஸிலரேட்டர் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தியது.
மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் தமிழகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரிடம் குழு விவாதம் நடத்தி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்த ஆய்வுநடத்தப்பட்டது. அதில் தங்கள்பள்ளியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என 67 சதவீத மாணவர்கள் தெரிவித்தனர். தங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானமே இல்லை என 21% மாணவர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச விதிமுறைகள் படி 20 கோடி இந்தியர்கள் சோம்பலான வாழ்க்கை வாழ்வது இந்த ஆய்வில்தெரியவந்துள்ளது. அதுவும் நகர்ப்புற பெண்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இது குறித்து ஆசியா பசிபிக்அமைப்பின் மண்டல இயக்குநர் ஸ்வேதா கூறுகையில், “விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை எல்லாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது கற்றுக்கொள்வது என்ற கருத்து நம்மிடம் உள்ளது. இது எண்ணம் ஒழிக்கப்பட வேண்டும். உண்மையில் விளையாட்டு, கல்வியின் வெற்றியை மேம்படுத்துகிறது. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை உடலியல் மாற்றங்கள், மனநிலை கட்டுப்பாடு, மனபலம், அறிவாற்றல் மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது” என்றார்.
ஸ்போர்ட்ஸ் அண்ட் சொசைட்டி ஆக்ஸிலரேட்டர் அமைப்பின் துணை நிறுவனர் தேஷ் கவுரவ் சேக்ரி கூறுகையில், “நாம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். நம் நாட்டில் உடற்பயிற்சியை, விளையாட்டுடன் இணைத்து குழப்பியுள்ளோம். அதனால் விளையாட்டு என்றாலே பதக்கம், போட்டி, வெற்றிபோன்றவைதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. இதன் பின்னால் ஆரோக்கியம், சமூகம், உற்பத்தி போன்ற முக்கியமான விஷயங்கள் உள்ளன.
விளையாட்டு மற்றும் உடல்உழைப்பில் நகரத்தில் உள்ள பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். மைதானங்கள், பூங்காக்கள் குறைவாக இருப்பதும் இதற்கு காரணம். அதோடு, பாதுகாப்பு, அச்சம் போன்றவற்றால் பலர்விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் உள்ளனர். இந்திய பெண்கள் தங்களின் 3-ல் இரண்டு பங்கு நேரத்தை வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனிப்பதில் செலவிடுகின்றனர்.
கிராமங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் உடல் உழைப்புஇல்லாத நிலை இரு மடங்காக உள்ளது. ஆகையால், பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுக்கு ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது.