அனந்தநாக்: ஜம்மு காஷ்மீரின் மாநில உரிமையை இண்டியா கூட்டணி மீட்டெடுக்கும் என்று மக்களவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் வரும் 18-ம் தேதி தொடங்கி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இந்த தேர்தலில் செப்.25-ம் தேதி இரண்டாம் கட்டமும், அக்.8-ம் தேதி மூன்றாம் கட்டமும் நடைபெறும். இதையொட்டி, ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த4-ம் தேதி ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். ரம்பன் சட்டமன்ற தொகுதிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி அனந்தநாக் மாவட்டத்தில் பேசினார். பிரச்சாரத்தின்போது ராகுல் கூறியதாவது: பாஜகவினால் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஒரு மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது. ஒரு யூனியன் பிரதேசம் மாநிலமாக மாற்றப்படும்போது அந்த பகுதியில் ஜனநாயகம் வேரூன்றும். அதுவேஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்போது அதன்உரிமைகள் யாவும் அபகரிக்கப்படும். இத்தகைய அநீதிதான் ஜம்மு காஷ்மீருக்கு இழைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இண்டியா கூட்டணியின் அரசு அடுத்த மாதம் ஆட்சி அமைக்க உள்ளது. நீதிக்கான போராட்டத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முழு பலத்துடன் தெருக்களிலிருந்து சட்டமன்றம் முதல் நாடாளுமன்றம்வரை எழுப்புவோம்.நான் உத்தரவாதம் அளிக்கிறேன். பாஜக என்ன சொன்னாலும் இண்டியா கூட்டணி உங்களுக்கு மாநில உரிமையை மீட்டுத்தரும். மாநில உரிமை மீட்கப்படும்வரை மத்திய அரசுக்கு இண்டியா கூட்டணி வலுவான அழுத்தம் கொடுக்கும். ஜம்மு காஷ்மீர் துணை நிலைஆளுநர் என்ற பெயரில் 21-ம்நூற்றாண்டில் மன்னராட்சி நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள்வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது மன்னரோ வெளியில் இருப்பவர்களுக்கு அனுகூலமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மின் தட்டுப்பாடு உங்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. ஆனால், உங்களை மின் கட்டணம்செலுத்த வைத்துவிட்டு உங்கள் உரிமைகளைப் பறித்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸுடன் தொடர்பில் உள்ள அந்நியர்களுக்கு ஒப்பந்தங்களை வாரி இறைக்கிறார்கள்.
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: பாஜகவும் ஆர்எஸ்எஸும் நாடுமுழுவதும் ஜனநாயகத்தின் மீதுதாக்குதல் தொடுத்து வருகின்றன. அதிலும் உங்களின் மாநில அந்தஸ்தை பறித்ததன் மூலம் நேரடியாக உங்களைத் தாக்கி உள்ளனர். அதுவே மணிப்பூர் மாநிலத்தைப் பாருங்கள், இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் உற்றுப்பாருங்கள், தேர்தல் ஆணையம், அரசு இயந்திரம், ஊடகம் என அனைத்து நிறுவனங்களையும் கையகப்படுத்தி அதில் கிடைக்கும் லாபத்தை இரண்டிலிருந்து மூன்று தொழிலதிபர்களுக்கு மடைமாற்றி விடுகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.