பெங்களூரு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் (47) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமி (33) என்பவரை கொன்ற வழக்கில் கடந்தஜூன் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர் நாகராஜ், ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திரா, பவுன்சர்கள் கார்த்திக், மஞ்சுநாத் உட்பட 17 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு கூடுதல் ஆணையர் கிரீஷ் நேற்று முன் தினம் பெங்களூரு மாநகரத்தின் 29-வது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,991 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். அதில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், தர்ஷன் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். 231 சாட்சியங்களின் அடிப்படையில் 17 பேர் மீதும் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தொல்லை: இந்த குற்றப்பத்திரிகையில், ”சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி இன்ஸ்டாகிராம் மூலம் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். நடிகர் தர்ஷனுக்கு திருமணமாகி குழந்தை இருப்பதால், அவரை விட்டு பிரிந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பவித்ரா கவுடா இதுகுறித்து தர்ஷனிடம், ‘‘ரேணுகா சுவாமிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அவரை போன்ற பிறவிகள் இருக்கவே கூடாது”என கூறியுள்ளார். எனவே தர்ஷன் தனது மேலாளர் நாகராஜ் மூலம் ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திராவை அனுப்பி ரேணுகா சுவாமியை சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளார்.
பெங்களூருவில் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஜூன் 8-ம் தேதி இரவு அவரை, அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இரும்புகம்பியில் அடித்ததுடன், ஷூ காலில் எட்டி உதைத்துள்ளார். அவருடன் இருந்த பவித்ரா கவுடாவும்ரேணுகா சுவாமியை திட்டியதுடன், செருப்பில் பல முறை அடித்துள்ளார். அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட செருப்பில் ரேணுகா சுவாமியின் ரத்தம் படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தர்ஷனும் பவித்ரா கவுடாவும் சம்பவ இடத்தில் இருந்தற்கான நேரடி சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் உள்ளன.
தர்ஷனின் பவுன்சர்களும், நண்பர்களும் சேர்ந்து ரேணுகா சுவாமியை சரமாரியாக அடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் அவரது உடலில் 10-க்கும்மேற்பட்ட இடங்களில் எலும்புகள் முறிந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையை மறைக்க தர்ஷன், ரேணுகா சுவாமியின் உடலை தனதுஉதவியாளர்கள் மூலம் சாக்கடையில் வீசியுள்ளார். மேலும் இந்த கொலையை மறைக்க 3 பேருக்கு பணம் கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள செய்துள்ளார்.
இதற்கான சிசிடிவி கேமராவில் பதிவான ஆதாரங்கள் சித்ரதுர்கா, வாகன நிறுத்தும் இடம், உடல் வீசப்பட்ட இடம், தர்ஷனின் வீடு, பவித்ரா கவுடாவின் வீடுஆகியவற்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதவிர தர்ஷன், பவித்ரா கவுடா, நாகராஜ், மஞ்சுநாத் ஆகியோரின் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனை பரிசோதித்த ஹைதராபாத் தடயவியல் ஆய்வகம், ரேணுகா சுவாமியின் ரத்தக் கறையை உறுதி செய்துள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.