கடலூர்: “கட்சி அங்கீகரிக்கப்பட்ட மகிழ்ச்சியில் நாங்கள் இருக்கின்றோம்” என்று கடலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை அறிவித்து தனது கட்சி கொடியினையும் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இது தொடர்பான அறிவிப்பை கட்சித் தலைவர் விஜய் அறிவித்த நிலையில், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூரில் இன்று (செப்.8) தமிழக வெற்றிக் கழக அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் உள்ள அங்காளம்மன் ஆலயம், கார்மேல் அன்னை ஆலயம், மஞ்சக்குப்பம் தர்கா ஆகிய இடங்களில் மும்மத பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கும், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் பிறகு தெரிவிக்கிறேன்” என்றார். தொடர்ந்து அக்கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய் மகிழ்ச்சித் தகவல்: முன்னதாக, விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாக பரிசீலித்தது நமது நாட்டின் தேர்தல் ஆணையம்.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்டக் கட்சியாக பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்தச் சூழலில் நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநாடுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
மாநாட்டுக்கு 33 நிபந்தனைகள்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ம் தேதி நடத்துவதற்காக காவல் துறையிடம் அனுமதி கோரினர். அதைப் பெற்றுக்கொண்ட விக்கிரவாண்டி போலீஸார், 21 கேள்விகளுக்கு பதிலளிக்க காவல் துறை தரப்பில் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் கடிதம் கொடுத்தனர். காவல் துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த 6ம் தேதி புஸ்ஸி ஆனந்த் பதில் கடிதம் அளித்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸார், காவல் துறை உயர் அதிகாரிகளுடன், பரிசீலனை செய்த பின், 33 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி கடிதத்தை சீல் வைத்து, விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், தவெக விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜியிடம் வழங்கினார். இதையடுத்து காவல் துறை அனுமதி அளித்தக் கடிதத்தின் 33 நிபந்தனைகள் குறித்து கேட்டபோது, கடிதம் பொதுச் செயலாளர் ஆனந்த்-க்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், முறைப்படி தலைவர் அறிவிப்பார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.