புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணத்துக்கான மானியத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூடுதல் வரியையும் (வாட்) அரசு ரத்து செய்துள்ளது.
முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது மின் கட்டணத்தில் ரூ.3 மானியமாக வழங்கப்பட்டது. தற்போது இந்த மின் கட்டண மானியத்தை அரசு ரத்து செய்துள்ளது. மின் கட்டணத்துக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை கூடுதல் செலவாகிறது. எனவே மின் கட்டண மானியத்தை அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 61 பைசாவும், டீசலுக்கு 92 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மொஹாலியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.97.01 ஆகவும், டீசலின் விலைரூ.87.21ஆகவும் உள்ளது. தற்போது வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசலின்விலை உயரும். இதுகுறித்து பஞ்சாப் மாநில நிதித்துறை அமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறும்போது, “மின் கட்டண மானியம் மட்டுமே தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும். அரசின் வருவாயைப் பெருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.