பாட்னா: டெல்லியில் இருந்து இஸ்லாம்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்த மகத் விரைவு ரயிலின் இணைப்பு உடைந்ததால் ரயில் இரண்டாக பிரிந்ததாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். பிஹார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தின் திவினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூருக்கு இடையே காலை 11.08 மணிக்கு இந்த விபத்து நடந்ததாகவும், அதில் யாரும் காயமடையவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்குறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி சரஸ்வதி சந்திரா கூறியதாவது: டெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்கு சென்று கொண்டிருந்த மகத் விரைவு வண்டியின் இணைப்பு உடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனால், திவினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூருக்கு இடையே ரயில் இரண்டாகப் பிரிந்தது. ரயில் திவினிகஞ்ச் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ரயில் என்ஜினில் இருந்து 13 மற்றும் 14-வதாக இருந்த எஸ்-6, எஸ்-7 இடையேயான இணைப்புகள் உடைந்து ரயில் இரண்டாக பிரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீட்பு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிக்கலை சரி செய்து வருகின்றனர். இதனால் டவுன் லைனில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.” என்று தெரிவித்தார். மேலும் எதனால் இந்த சம்பவம் நடைபெற்றது என்ற அறிய உத்தரவிடப்படும் என்றும் தெரிவித்தார்.