இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்யூவி பிரிவில் போட்டி இன்னும் தீவிரமடைய உள்ளது, சில புதிய மாடல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில், மாருதி, ஹூண்டாய் முதல் கியா வரை பல மைக்ரோ எஸ்யூவிகளும் அறிமுகமாகவிருக்கின்றன. இந்தியாவில் சப்-4 மீட்டர் SUV பிரிவு அதிகரித்து வரும் தேவை காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா பஞ்ச் (Tata Punch), ஹூண்டாய் எக்ஸ்டெர் (Hyundai Exter) மாருதி சுசூகி ஃப்ரொன்க்ஸ் Maruti Suzuki Fronx போன்ற மைக்ரோ SUV கார்களின் அறிமுகத்துடன், சந்தை வேகமாக விரிவடைந்துள்ள நிலையில், இந்த நிறுவனங்களின் புதிய மாடல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியச் சந்தையில் எதிர்வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவிகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கியா சிரோஸ்
கியா தனது புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதற்கு பெயர், கிளாவிஸ் அல்லது சிரோஸ் என்று இருக்கலாம். ADAS தொழில்நுட்பம், சன்ரூஃப் கொண்டதாகவும், காற்றோட்டம் கொண்ட முன் இருக்கைகள், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, 360 டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரு விதங்களில் வரலாம்.
மாருதி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட்
மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சக்கை போடு போடுகிறது. 2025 ஆம் ஆண்டில் வலுவான ஹைப்ரிட் பவர் ட்ரெய்னுடன் கூடிய Fronx இன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட Fronx காரில், எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கலப்பின தொழில்நுட்பத்துடன் வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
ஹூண்டாய் இன்ஸ்டர் ஈ.வி
எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி சந்தையை இலக்காகக் கொண்டு 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹூண்டாய் இன்ஸ்டர் ஈவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. Tata Punch EVக்கு போட்டியாக, Inster EV ஆனது 300-355 கிமீ வரை செல்லும் வகையிலான இரண்டு பேட்டரிகளுடன் இருக்கலாம். இரட்டை காட்சிகள், காலநிலை கட்டுப்பாடு, ADAS மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற அம்சங்களுடன் அட்டகாசமாக களம் இறங்கும் என்று கூறப்படுகிறது.
மாருதி சிறிய SUV (Y43)
மாருதி ஹூண்டாய் எக்ஸ்டெர் மற்றும் டாடா பன்ச்க்கு போட்டியாக ஒரு புதிய மைக்ரோ எஸ்யூவியைத் திட்டமிட்டுள்ளது, இது 2026 பண்டிகைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.2L Z-சீரிஸ் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருக்கும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கும் இந்த காரின் சில வடிவமைப்பு கூறுகள் மற்றும் அம்சங்கள் மாருதியின் Fronx காரைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.