லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று மாலை இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் கடை மற்றும் குடோன்கள் செயல்பட்டு வந்தன. கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் அங்கிந்து பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு நிலவரப்படி 5 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து இன்று அதிகாலையில் மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. எனினும், இடிபாடுகளில் யாரும் சிக்கியிருக்க வாய்ப்பு இல்லை என மீட்புக்குழுவினர் கூறுகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லோக் பந்து மருத்துமனைக்கு செல்ல உள்ளார். அம்பேத்கர் நகரில் இருந்து திரும்பியதும் மருத்துவமனைக்கு செல்கிறார்.
இடிந்து விழுந்த கட்டிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும், இன்னும் சில கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தரைத்தளத்தில் வேலை செய்தவர்கள்.