‘நடிகர் விஜய் நடிகர் சங்கத்திற்காக நிதியாக ரூ.1 கோடி கொடுத்துள்ளார்’ என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் நடிகர் கார்த்திக் பேசியுள்ளார்.
இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காலை 10 மணியிலிருந்தே நடந்து வருகிறது. இந்தப் பொதுக்குழு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் மன்சூர் அலிகானும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய பொருளாளர் நடிகர் கார்த்தி, “நடிகர் சங்கத்திற்கு இருக்கும் கடனை அடைக்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளனர்.
தென்னந்திய நடிகர் சங்கத்திற்காக நடிகர் விஜய் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இந்த ரூ.1 கோடி கடனாக அல்லாமல் நிதியாக தந்துள்ளார். மேலும் சங்கத்தில் இருக்கும் மகளிர்களின் புகார்களை விசாரிக்க ஒரு குழு அமைத்துள்ளோம்” என்று பேசியுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
2019-ம் ஆண்டு நடிகர் சங்கம் அமைத்த விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி பேசும்போது, “நடிகர் சங்கத்தில் புகாரளிப்பதற்கு முன்பாக திரைத்துறையை சேர்ந்த பெண்கள் ஊடகத்தில் பேச வேண்டாம். இது உங்களுக்கு எந்த பலனையும் அளிக்காது” என்று பேசியுள்ளார்
தற்போதிருக்கும் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. ஆனால் நடிகர் சங்க கட்டடப் பணிகள் இன்னும் முடியாத பட்சத்தில், நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.