India vs Bangladesh Test Match 2024: நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ம் தேதி வியாழன் அன்று சென்னை MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி முதல், இந்த ஆண்டு முழுவதும் நிறைய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. மேலும் அடுத்தடுத்து பெரிய அணிகளுடன் டெஸ்ட் தொடர் வர உள்ள நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 சுழற்சியில் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி சொந்த மண்ணில் அவர்களை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது பங்களாதேஷ் அணி. பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இந்திய வீரர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும். மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் இடம் பெற அதிக ரன்கள் அடிக்க வேண்டும். டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் இடம் பெற உள்ளனர். அதே சமயம் இந்த தொடரில் ஒரு சில நட்சத்திர இந்திய வீரர்கள் இடம் பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா
டி20 உலக கோப்பையை வென்றதில் முக்கிய வீரராக இருந்த ஜஸ்பிரித் பும்ரா பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இடம் பெறாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வில் இருக்கும் பும்ரா இலங்கை சுற்றுப்பயணத்தில் இடம் பெறவில்லை. பங்களாதேஷ் தொடருக்கு பிறகு நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பார்டர்-கவாஸ்கர் டிராபி போன்ற முக்கிய தொடர் வர உள்ளதால், பும்ராவிற்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது ஷமி
பங்களாதேஷ் தொடரை இழக்கக்கூடிய மற்றொரு இந்திய வீரர் முகமது ஷமி. குதிகால் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு எந்த ஒரு தொடரிலும் இடம் பெறவில்லை. காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் முழு ஓய்வில் இருந்து வருகிறார். பங்களாதேஷ் தொடரில் ஷமி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் அவருக்கு ஓய்வு அளிக்கவுள்ளது பிசிசிஐ. எனவே அடுத்த நியூசிலாந்து தொடரில் ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர்
பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகமே. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க நீண்ட காலமாக போராடி வருகிறார் ஐயர். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் பெரிதாக ரன்கள் அடிக்காத ஐயர், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை தொடரிலும் ரன்கள் அடிக்கவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் துலீப் டிராபி தொடரிலும், இந்தியா Dக்காக முதல் இன்னிங்ஸில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 54 ரன்கள் எடுத்தார். இருப்பினும் ஐயருக்கு பதில் டெஸ்ட் அணியில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில்
சுப்மன் கில் பங்களாதேஷ் தொடரில் இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறாத சுப்மன் கில் சமீபத்தில் எந்த ஒரு தொடரிலும் சிறப்பாக விளையாடவில்லை. துலீப் டிராபியிலும் கில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. எனவே டெஸ்டில் மூன்றாவது இடத்தில் விராட் கோலியும், நான்காவது இடத்தில் கேஎல் ராகுலும் விளையாட அதிக வாய்ப்புள்ளது.