நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘எமெர்ஜென்சி’.
இந்தப் படம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமெர்ஜென்சியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத்தே நடித்திருக்கிறார். கடந்த 14-ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தேதி படம் வெளியாகவில்லை. சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காத நிலையில், தேதி குறிப்பிடாமல் படத்தை ஒத்திவைப்பதாகப் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
“திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். சென்சார் அமைப்பிடமிருந்து படத்தின் சான்றிதழுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் புரிதலுக்கும், பொறுமைக்கும் நன்றி” என்று கங்கனா ட்வீட்டும் செய்திருந்தார். இந்நிலையில் சென்சார் போர்டு UA சான்றிதழை வழங்கி இருக்கிறது.
இதற்கு முன் சென்சார் போர்டு சில காட்சிகளை நீக்கவும், சர்ச்சைக்குரிய வரலாற்று அறிக்கைகளுக்கு உண்மையான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. அதாவது இந்தியப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த வசனங்கள், பாகிஸ்தான் வீரர்கள் வங்கதேச அகதிகளைத் தாக்குவது மாதிரியான காட்சிகள்,
‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ பற்றிய உண்மையான புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது போன்ற 10 இடங்களில் சில விஷயங்களை மாற்றவும், 3 இடங்களில் காட்சிக்களை நீக்கவும் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.