பாராலிம்பிக்ஸின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நவதீப் சிங் தங்கம் வென்றிருக்கிறார்.
பாரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பாராலிம்பிக்ஸ் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த நவ்தீப் சிங் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார். ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்றில் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாவது இடம் பிடித்திருந்தார்.
அதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஈரான் வீரர் சாடேக் பெயிட் சாயா 47.64 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்து இருந்தார் அவருக்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் தங்கம் வென்றதைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்தி இருக்கிறார்.
அதனால் பாராலிம்பிக்ஸ் விதிகளின்படி இது தவறு என்பதால் அவரது தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டிருகிறது. தகுதி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் வெள்ளிப் பதக்கம் வென்ற நவ்தீப் சிங்கிற்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாராலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியில் தனது சிறந்த ஈட்டி எறிதலை பதிவு செய்திருந்தார்.
நவ்தீப் வென்ற இந்தப் பதக்கம் 2024 பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியாவின் 7-வது தங்கப் பதக்கம் ஆகும். இதன் மூலம் இந்தியா ஒட்டுமொத்தமாக 29 பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்தியா தற்போது பதக்க பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் சீனா இருக்கிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.