தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவு: "அறிமுக இயக்குநர்களின் வேடந்தாங்கல்" – நெகிழ்ந்த இயக்குநர் மு.மாறன்

தமிழ் சினிமாவில் பல அறிமுக இயக்குநர்களை அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு. உடல்நலப் பாதிப்பின் காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 50. ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்ட்டரி என்ற நிறுவனத்தின் மூலம் ‘உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ‘ஓ மை கடவுளே’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’, ‘கள்வன்’ எனப் பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. அவர் தயாரித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு.மாறன், அவரது நினைவுகளை இங்கே கனத்த இதயத்துடன் பகிர்கிறார்.

”சாரோட மறைவு செய்தியை நேற்று கேட்டதில் இருந்தே, அதிர்ச்சியா இருந்துச்சு. சினிமாவை ரொம்பவும் நேசிப்பவர். தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர்களை இயக்குநராக்கி அழகு பார்க்கற தயாரிப்பாளர்கள் ரொம்பவே குறைவு. ஆர்.பி.சௌத்ரி மாதிரி புதுமுக இயக்குநர்களின் மீது நம்பிக்கை வைக்கும் தயாரிப்பாளர் டில்லி பாபு சார்தான்.

டில்லி பாபு

கதைகள் மீது ரொம்பவும் நம்பிக்கை வைக்கறவர். ரொம்ப கரெக்ட்டா கேட்பார். பலமுறை அந்தக் கதையை கேட்பார். தான் மட்டும் கதையை கேட்காமல், கூட இருக்கறவங்களையும் அந்த கதையை கேட்க வைத்து, கருத்துகள் கேட்பார். அவரோட முதல் படமான ‘உறுமீன்’ படத்தோட உதவி இயக்குநர் என்னோட நண்பர். அவரை சென்னை திரைப்பட விழாவில் பார்த்தேன். அந்த சமயத்தில் நான் இயக்குநராகும் முயற்சியில் இருந்தேன். அவர்தான் என்கிட்ட ‘டில்லி பாபு சார், கதைகள் கேட்குறார். நீங்களும் முயற்சி பண்ணுங்களேன்’னு சொல்லி எனக்கு சாரோட நம்பரை கொடுத்தார்.

டில்லி பாபு சார்கிட்ட நான் போன் பண்ணினதும், உடனே கால் அட்டர்ண் பண்ணினார். அப்ரோச்சபிள் பர்சன். நான் ஒரு உதவி இயக்குநர் உங்ககிட்ட கதை சொல்லணும் சார்னு சொன்னேன். உடனே வரச் சொன்னார். அங்கே அவருடன் அவரது அக்கா பையன் பூர்னேஷும் இருந்தார். ரெண்டு பேருமே முழுக்கதையையும் கேட்டாங்க. கிரைம் கதையை சிரிச்சுக்கிட்டே கேட்டாங்க. எனக்கு கொஞ்சம் டவுட்டா இருந்துச்சு. ஆனா, ஒரே வாரத்துல அவர்கிட்ட இருந்து போன் வந்தது. மறைமலை நகர்ல ஒரு ஹோட்டலுக்கு வரச் சொன்னார். அங்கே போனால், அவரது வீட்டுல உள்ளவங்க. அவரது ஆபீஸ்ல வேலை செய்யுறவங்கனு பத்து பேர்கள் இருந்தாங்க. எல்லோரும் கையிலும் பேனாவும், பேப்பருமாக இருந்துச்சு. மார்க் போடுறதுகாக! காமெடி எப்படி இருந்துச்சு.. ஆக்‌ஷன் எப்படி? கதை சொல்ற பாணி எப்படி? இப்படி ஒவ்வொரு விஷயமாக கவனிச்சு, மார்க் போட்டாங்க. அத்தனை பேருக்கும் கதை ரொம்ப பிடிச்சிருந்தது. நானும் சரி, ‘மரகதநாணயம்’ சரவணனும் சரி ரெண்டு பேருமே இப்படித்தான் அவர்கிட்ட கதைகள் சொன்னோம். அவர் கதையை கேட்டபின்னர், பவுண்டட் ஸ்கிரிப்ட்டை கேட்டு வாங்கினார்.

இயக்குநர் மு.மாறன்.

அப்புறம் ரெண்டு மாதங்கள் டைம் எடுக்கிட்டு, கன்ஃபார்ம் பண்ணினார். இந்தக் கதை சரியானதா? மினிமம் கேரண்டி இருக்குதா? இப்படி ஒவ்வொரு விஷயத்தைக் கவனிச்சு பண்ணுவார். ஸ்பாட்டுக்கு வந்தார்னா குறுக்கீடு, தலையீடு எல்லாம் பண்ணமாட்டார். சில ஆலோசனைகள் சொல்லுவார். அவர் நமக்கு சரியா இருக்கும். இப்படி ஒரு கதை கேட்கும், சினிமாவை காதலிக்கும் தயாரிப்பார்கள் அமையறது அரிது.

புது இயக்குநர்கள்கிட்ட ஆர்.பி.சௌத்ரி சார் எப்படியோ, அப்படி டில்லி பாபு சாரையும் சொல்லலாம். இவர் பண்ண எல்லா படங்களும் புது இயக்குநர்களின் படங்கள் தான். இதுல விதிவிலக்கு. ‘ராட்சசன்’ படம்தான். ஏன்னா அந்த படத்தை வேறொருத்தர் தயாரிப்பாதாக இருந்தது. அப்புறம், இவர் தயாரித்தார். மத்தபடி எல்லா படங்களும் புது இயக்குநர்களின் படங்கள்தான். அடுத்தும் தயாரிக்க ஐந்தாறு புது இயக்குநர்களிடம் அட்வான்ஸ் கொடுத்து வச்சிருக்கார். என்னோட நட்பு வட்டத்திலேயே ஒருத்தார் அவர்கிட்ட கதை சொல்லியிருக்கார். அறிமுக இயக்குநர்களின் வேடந்தாங்கலாகவே இப்படி ஒரு தயாரிப்பாளர் இனி கிடைக்க மாட்டாங்க. என்னை மாதிரி அவர்கிட்ட படம் பண்ணி இன்னிக்கு நல்ல இடத்துல இருக்கற இயக்குநர்கள் நிறைய பேர் இருக்கோம். எங்க எல்லோருக்குமே அவரது மறைவு வருத்தமா இருக்குது. 50 வயது என்பது மறையக்கூடிய வயது அல்ல. அவரது இறப்பு திரையுலகிற்குப் பெரும் இழப்புதான்.” – துயரில் நெகிழ்கிறார் மாறன்.

மறைந்த டில்லி பாபு இப்போது ‘வளையம்’, ‘யார் அழைப்பது’ ஆகிய படங்களை தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.