`பித்தப்பை கல் அகற்றுவது எப்படி?' Youtube பார்த்து ஆப்ரேஷன்… பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்!

சமீபத்தில் இயக்குநர் சங்கர் தயாரிப்பில், கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில், சரியாக படிக்காத மருத்துவர் ஒருவர் யூடியூப் பார்த்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் காட்சி இடம்பெற்றிருக்கும். அது திரைப்படம்தான் என்றாலும், அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கே குலை நடுங்கும். ஆனால், அதுபோன்ற ஒரு அதிர்ச்சி உண்மை சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது.

மருத்துவர் – ஆப்ரேஷன் – youtube

பீகார் மாநிலம், மதுரா அருகில் இருக்கும் புவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (15) என்ற சிறுவனுக்கு, கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. தொடர் வாந்தியும் இருந்ததால், பதறிய கிருஷ்ண குமாரின் பெற்றோர், சரண் மாவட்டத்தில் இருக்கும் அஜித் குமார் பூரி என்பவரின் தனியார் மருத்துவமனைக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு சென்றிருக்கின்றனர்.

அவருக்கு அஜித் குமார் பூரி சில மருந்துகளை கொடுத்திருக்கிறார். அந்த மருந்துகளை உட்கொண்டப்பின், கிருஷ்ண குமாருக்கு வயிற்று வலி குறைந்திருக்கிறது. ஆனாலும், அஜித் குமார் பூரி ‘சிறுவனுக்கு பித்தப்பையில் கல் இருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என அவசரப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக கிருஷ்ண குமாரின் தாத்தா பிரஹலாத் பிரசாத் ஷா,“ அஜித் குமார் பூரி, கிருஷ்ண குமாரின் தந்தையிடம் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கிவரக் கூறினார். என் மகன் சென்றவுடன் கிருஷ்ண குமாருக்கு அவசர அவசரமாக எங்கள் அணுமதியின்றி, செல்போனில் வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினார். அப்போது கிருஷ்ண குமாரின் உடல்நிலை மோசமானது. உடனே அவரை பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அஜித் குமார் பூரி ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே கிருஷ்ண குமார் இறந்துவிட்டார். அஜித் குமார் பூரியும் மற்ற மருத்துவமனை ஊழியர்களும் தப்பி ஓடிவிட்டனர்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.எம்.ஏ மாநிலச் செயலாளர் டாக்டர் சந்தோஷ் குமார் சிங், “உண்மையான மருத்துவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் கும்பல்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற மோசடியாளர்களுக்கு எதிராக சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தலைமறைவாக இருக்கும் மருத்துவரையும், மருத்துவமனை ஊழியர்களையும் தேடி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.