கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அதே சமயம் ஒரு நாள் தொடரை 2 – 0 என்ற கணக்கில் தோல்வியும் அடைந்தது. இந்த தொடருக்கு பிறகு கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக இந்திய அணியின் வீரர்கள் ஓய்வில் இருந்து வருகின்றனர். அடுத்ததாக வரும் செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சிலர் விளையாடி வருகின்றனர், இது அடுத்தடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட அவர்களுக்க்கு உதவும். பிசிசிஐ சமீபத்தில் பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது, அதில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரிஷப் பந்த் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் யாஸ் தயாளுக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் வீரர்கள் நீண்ட நாட்களாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் வீரர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகவும் திணறினர், இதனை சரி செய்ய ஹிமான்ஷு சிங் என்ற இளம் சுழற் பந்துவீச்சாளரை பயிற்சிக்காக தேர்வு செய்துள்ளது அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வு குழு. வரும் 12 ஆம் தேதி முதல் ஹிமான்ஷு சிங் இந்திய பேட்டர்களுக்கு பந்து வீச தயாராக உள்ளார். யார் இந்த ஹிமான்ஷு சிங் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஹிமான்ஷு சிங்
21 வயதான ஹிமான்ஷு சிங் அஸ்வினை போலவே சிறப்பாக பந்து வீசும் திறமையை கொண்டுள்ளார். மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இவர் ஏற்கனவே பிரபலமடைந்து வருகிறார். இன்னும் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத இவரை தற்போது பயிற்சிக்காக பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. அவரின் வித்தியாசமான பந்துவீச்சு தேர்வாளர்களை ஈர்த்துள்ளது. “கடந்த சில மாதங்களாக இந்தியாவின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் இணை தேர்வாளர்கள் ஹிமான்ஷு சிங்கை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நன்கு உயரம் கொண்ட இவர் (ஆறு அடி நான்கு அங்குலம்) கிட்டத்தட்ட அஷ்வின் போல் பந்து வீசும் திறமையை கொண்டுள்ளார்” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற கேப்டன் கே திம்மப்பையா நினைவு போட்டியில் ஹிமான்ஷு சிங் ஆந்திராவுக்கு எதிராக மும்பை அணிக்காக 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இன்னும் அதிகார்வப்பூர்வமாக மும்பை அணியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும், அவரது கிரிக்கெட் எதிர்காலம் சீராக உள்ளது. ஏற்கனவே ஹிமான்ஷு சிங் மும்பையின் U-16 மற்றும் U-23 அணிகளுக்காக விளையாடியுள்ளார். இது தவிர அனந்தபூர் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற பிசிசிஐயின் வளர்ந்து வரும் வீரர்கள் முகாமிலும் ஹிமான்ஷு சிங் இருந்தார். வங்கதேச டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஹிமான்ஷு சிங் பங்களிப்பு முக்கியமானதாக அமைய உள்ளது. பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா வருகிறது வங்கதேச அணி.