புதுடெல்லி: அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசர் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அணுசக்தி, இயற்கை எரிவாயு, உணவு பூங்கா மேம்பாடு ஆகிய துறைகளில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அவரை பிரதமர் மோடி நேற்று வரவேற்றார். பின்னர், அபுதாபி – இந்தியா இடையே இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி எமிரேட்ஸ் நியூக்ளியர் எனர்ஜி (இஎன்இசி) – இந்திய அணுசக்தி கழகம் (என்பிசிஐஎல்) இடையே பராக்கா அணுமின் நிலைய செயல்பாடுகள், பராமரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில் உணவு பூங்காக்களை மேம்படுத்துவது தொடர்பாக குஜராத் மாநில அரசுக்கும், அபுதாபி டெவலப்மென்ட் ஹோல்டிங் கம்பெனி பிஜேஎஸ்சி (ஏடிகியூ) நிறுவனத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ஏடிஎன்ஓசி) நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்தவகையில், நீண்ட கால எல்என்ஜி (திரவஇயற்கை எரிவாயு) விநியோகத்துக்காக இந்தியன் ஆயில் கழகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல, உர்ஜா பாரத் நிறுவனத்துடன் அபுதாபி ஆன்ஷோர் பிளாக் 1-க்கான தயாரிப்பு சலுகை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், இந்தியன் ஸ்ட்ராட்டஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் (ஐஎஸ்பிஆர்எல்) நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சந்திப்பின்போது, மத்திய தொழில், வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: இதற்கிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அபுதாபி இளவரசர் அல் நஹ்யான் சந்தித்தார். இதுகுறித்து திரவுபதி முர்மு கூறும்போது, ‘‘ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-ம் தலைமுறை தலைமையை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் தொலைநோக்கு பார்வையால் இருதரப்பு உறவுகள் வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை அடைந்துள்ளது. புதிய துறைகளில் பல ஒப்பந்தங்கள் மூலம் இந்த கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தியதில் மிகவும் திருப்தி’’ என்றார்.
இளவரசர் அல் நஹ்யான், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியபோது, ‘‘அபுதாபி இளவரசர் அல் நஹ்யான் இந்தியாவுக்கு தனது முதல்அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டது இருதரப்பு வரலாற்று உறவில் ஒரு புதிய மைல்கல். சமீபகாலமாக, அரசியல், வர்த்தகம், முதலீடு, இணைப்பு, ஆற்றல், தொழில்நுட்பம், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இளவரசரின் இந்திய வருகை அந்த உறவை மேலும் வலுப்படுத்தும்’’ என்றார்.
கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர் பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பயனாக, 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, அபுதாபியில் முதல் இந்து கோயிலான ‘பாப்ஸ்’மந்திரை மோடி திறந்து வைத்தார்.
2-வது பெரிய வர்த்தக நாடு: ஐக்கிய அரபு அமீரகத்தின் 2-வது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியாஉள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் ரூ.8.40 லட்சம் கோடியை (100 பில்லியன் டாலர்)தொடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ல் இது ரூ.7.14 லட்சம் கோடியாக(85 பில்லியன் டாலர்) இருந்தது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.