நெதர்லாந்து, லைடன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் டாக்டர் ஜெரோன் வான் டெர் வெல்டே, நாம் தூங்கும் நேரத்துக்கும் உடல் கொழுப்பு விநியோகம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் இருக்கும் தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
நீரிழிவு நோய் என டைப் 1 மற்றும் டைப் 2 இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. டைப் 2 வகை நீரழிவு நோய் இந்தியாவில் மிகவும் பொதுவானதாக காணப்படுகிறது. 10 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
இது ஒரு நாள்பட்ட நோய். உடல் இன்சுலினை (கணயத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்) சரியாகச் சுரக்காமல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைக் குறிக்கும். போதுமான உடல் உழைப்பு இல்லாதது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியன இதற்குக் காரணங்களாக இருக்கலாம் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 5000 பேருடைய தரவுகள் ஆராயப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் சராசரி வயது 56. இவர்கள் தூங்கச் செல்லும் நேரத்தைப் பொருத்து (க்ருனோடைப் – chronotype) சீக்கிரமாகத் தூங்குபவர்கள் (Early Chronotypes), இடைநிலையினர் (Intermediate Chronotypes), தாமதமாகத் தூங்குபவர்கள் (late Chronotypes) என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களின் பி.எம்.ஐ, இடுப்பு அளவு, உடல் கொழுப்பு அளவு கணக்கிடப்பட்டுள்ளது. உடல் உள்ளுறுப்புகள் மற்றும் நுரையீரல் கொழுப்பை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் அளவிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 6.6 ஆண்டுகள் இவர்களின் தரவுகளைக் கணக்கிட்டதில் 225 பங்கேற்பாளர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
“தாமதமாகத் தூங்குபவர்களின் சர்காடியன் ரிதம் (24 மணி நேர உடல், மன மற்றும் நடத்தை சுழற்சி) சமூகம், பணியிடத்துடன் ஒத்துப்போவது இல்லை. இதனால் சர்காடியன் மிஸ்-அலைங்ன்மென்ட் (தவறான அமைப்பு) ஏற்பட்டு வளர்சிதை மாற்றக் கோளாறுகள் முதல் டைப் 2 நீரிழிவு நோய் வரை ஏற்படலாம்.” என்கிறார் தலைமை ஆய்வாளர் டாக்டர் ஜெரோன் வான் டெர் வெல்டே.
இந்த ஆய்வில் தாமதமாகத் தூங்குபவர்கள், இடைநிலை நேரத்தில் தூங்குபவர்களை விட டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாக 46% அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இவர்களின் பி.எம்.ஐ அதிகரிப்பதுடன், இடுப்பு பகுதிகளிலும் உள்ளுறுப்புகளிலும் கொழுப்பு அதிகரிக்கிறது.
இதனால் தாமதமாகத் தூங்குபவர்கள் தங்களது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார் டாக்டர் ஜெரோன் வான் டெர் வெல்டே. இந்த ஆய்வு முடிவுகளை உறுதி செய்ய ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.