கிழக்கு திமோரில் போப் பிரான்சிஸ் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்பு

டிலி,

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் பப்புவா நியூ கினியாவிலிருந்து கிழக்கு திமோர் நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ் மற்றும் பிரதம மந்திரி சனானா குஸ்மாவோ ஆகியோர் விமான நிலையத்தில் போப்பை வரவேற்றனர்.

போப் பிரான்சிஸ் வருகையை முன்னிட்டு கிழக்கு திமோரின் தலைநகர் டிலியில் திரண்ட அந்நாட்டு மக்கள், மஞ்சள் மற்றும் வெள்ளை நிற குடைகளை அசைத்தபடி வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். போப் பிரான்சிசை காண்பதற்காக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

அங்குள்ள டாசிடோலு அமைதி பூங்காவில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். கிழக்கு திமோர் நாட்டின் மொத்த மக்கள் தொகை 13 லட்சம் ஆகும். இதில் 98 சதவீதம் பேர் கத்தோலிக்கர்களாக உள்ளனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில், ஒரு போப் ஆண்டவரின் பிரார்த்தனை நிகழ்ச்சியில் அதிக அளவிலான மக்கள் கலந்து கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ், கிழக்கு திமோரில் அதிக குழந்தைகள் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர்களுக்கு அமைதியான, ஆரோக்கியமான குழந்தைப் பருவம் கிடைப்பதை அரசியல் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

1975-ல் கிழக்கு திமோர் மீதான தனது காலனி ஆதிக்கத்தை போர்ச்சுக்கல் கைவிட்டது. இதைத் தொடர்ந்து இந்தோனேசியா படையெடுத்து திமோரை கைப்பற்றியது. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கிழக்கு திமோர், 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

இந்தோனேசியாவுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் டாசிடோலு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இடம் தற்போது அமைதி பூங்காவாக அறியப்படுகிறது. அந்த இடத்தில்தான் போப் பிரான்சிஸ் இன்று பிரார்த்தனை கூட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.