புதுடெல்லி: குரங்கம்மை அறிகுறி உள்ள அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. குரங்கம்மை குறித்து அச்சம் தேவையில்லை என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 8-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி இருந்தது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் நலமுடன் உள்ளார். அவரது ரத்த மாதிரி, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். இது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சக செயலர் கடிதம்: இந்நிலையில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் புதிதாக குரங்கம்மை பாதிப்பு இதுவரை பதிவாகவில்லை. சந்தேகத்தின்பேரில் ரத்தப் பரிசோதனை செய்தவர்களுக்கும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
எனினும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளின் தயார் நிலை குறித்து மாநில அரசுகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, குரங்கம்மை நோய் பரவினால் நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகள், மருந்துகள் உள்ளதா, தேவையான சுகாதார பணியாளர்கள் உள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின்கீழ் (ஐடிஎஸ்பி) சம்பந்தப்பட்ட பணியாளர்களை அழைத்து, நோய் பரவினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
நோய் அறிகுறி உள்ளவர்கள், நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது, நோய் பரவுவதை தடுப்பது ஆகியவை குறித்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்க வேண்டும்.
அதேநேரம், குரங்கம்மை குறித்து அச்சம் தேவையில்லை என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, இதுதொடர்பாக வதந்தி பரவுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.